சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆய்வு செய்யும் மத்திய அமைச்சர்கள்! - பாஜகவின் அஜெண்டா என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் மத்திய அமைச்சர்கள் ஆய்வு செய்துவரும் விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 'ஆய்வு என்ற பெயரில் தேர்தல் வேலையைச் செய்கிறது பாஜக' என்று அரசியல் கட்சிகள் பலவும் குற்றம் சுமத்துகின்றன.

'இது வழக்கமான நடைமுறைதான்' என தமிழக பாஜக நிர்வாகிகள் பதில் கொடுத்து வருகின்றனர். 'மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து ஆய்வு செய்வது என்பது வழக்கமான நடைமுறைதான். ஆனால், அந்த நடைமுறை வரலாறு காணாதவகையில் உள்ளது' என்பதுதான் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு.

Central ministers are continue to review mettings in Tamil Nadu, What is the BJPs agenda?

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும்போது, 'மத்திய அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்குச் செல்கிறதா என்பதை ஆய்வு செய்ய 30 நாள்களில் 76 அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு வர உள்ளனர்' என்றார். 'மாநிலத்தில் மத்திய அசின் நலத்திட்டங்கள் சரியாக நடக்கின்றனவா?' என்பதை ஆராய மாதத்துக்கு ஓர் அமைச்சர் வந்தாலே அது வியப்பான செய்தி. ஆனால் அண்ணாமலையோ 30 நாள்களில் 76 அமைச்சர்கள் வரவுள்ளதாகக் கூறுகிறார். 'இது மிரட்டல் தொனி' எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'தமிழ்நாட்டுக்கு 76 அமைச்சர்களை அனுப்பிவைத்து ஆய்வு செய்யும் அளவுக்கா திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன?' என சாமானிய மனிதனுக்குக்கூட சந்தேகம் எழும். அப்படியென்றால் எதிர்க்கட்சிகள் சந்தேகிக்காமல் இருப்பார்களா?

அண்ணாமலை இப்படியொரு கருத்தை முன்வைத்த அடுத்த நிமிடமே பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவே கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது. இதுகுறித்துப் பேசிய வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவும் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான கே.பி.முனுசாமி, 'மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாகச் செயல்படும்போதுதான் இந்திய இறையாண்மையைக் காப்பாற்ற முடியும். காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோதுகூட அன்றைய ஆட்சியாளர்கள் இவ்வளவு கீழே இறங்கி வரவில்லை. அன்றும் மத்திய அரசின் நலத்திட்டங்கள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் கிடைத்துக்கொண்டுதான் இருந்தது' என்றார்.

Central ministers are continue to review mettings in Tamil Nadu, What is the BJPs agenda?

தொடர்ந்து பேசிய கே.பி.முனுசாமி, ' கடந்த 50 ஆண்டுகாலமாக மத்தியில் ஆளுகின்ற கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இல்லை. திராவிட இயக்கங்கள்தான் ஆட்சி செய்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், 'மத்திய அரசுத் திட்டங்களை நாங்கள் தமிழ்நாட்டில் கொண்டுவந்துள்ளோம். ஆகவே ஆய்வு செய்ய வருகிறோம்' என்று பாஜகவினர் சொல்கிறார்கள். அது ஆரோக்கியமானது அல்ல' என்றார்.

பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரே இப்படியொரு கருத்தை முன்வைத்திருக்கிறார். கடந்த அதிமுக ஆட்சியில் அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசுத் துறைகளில் ஆய்வை மேற்கொண்டபோது, 'ஆளுநர் தனி அரசாங்கம் நடத்துகிறார்' எனக் கூறி எதிர்க்கட்சியாக இருந்த திமுக போராட்டங்களை நடத்தியது. இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மத்திய அமைச்சர்கள் ஆய்வினை மேற்கொள்வது தொடர்பாக அதிமுக, தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. மத்திய அமைச்சர்களின் ஆய்வு குறித்துக் கருத்து தெரிவித்துள்ள திமுக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணன், ''ஒன்றிய அமைச்சர்களாக அவர்கள் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. பாஜகவின் ஏஜென்டுகளாகத்தான் வருகிறார்கள்" என்கிறார்.

அதேநேரம், திமுக பொதுச்செயலாளரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகனோ, 'இதனை வரவேற்கிறேன். அவர்கள் பணம் கொடுத்துள்ளார்கள். அந்தப் பணம் சரியாகச் செலவிடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வருவதில் என்ன தப்பு? அதில் தவறில்லை' எனக் கூலாக பேசியிருக்கிறார்.

Central ministers are continue to review mettings in Tamil Nadu, What is the BJPs agenda?

''தமிழ்நாட்டில் அரசியல் நடத்த வேண்டும் என்று பாஜகவினர் விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் குறைந்தது 6 இடங்களிலாவது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். அதற்கு இப்போதிருந்தே ஒரு தொகுதிக்கு 3 மத்திய அமைச்சர்கள் என்று பொறுப்பு கொடுத்து அதை முன்னெடுக்கிறார்கள். இந்தப் பணியில் பாஜகவினரைப் பொறுப்பில் அமர்த்த வேண்டியதுதானே? மத்திய அமைச்சர்களுக்குப் பொறுப்பு கொடுத்து ஏன் அதைச் செய்ய வைக்கவேண்டும்?'' எனக் கேள்வியெழுப்புகிறார், சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளரான கே.பாலகிருஷ்ணன்.

மேலும், '' மத்திய அரசாங்கத்தின் செலவில் வந்து பாஜக தேர்தல் வேலையைச் செய்வதா? இவை மக்களுக்கான ஆய்வுகள் அல்ல; மத்திய அமைச்சர்களைப் பயன்படுத்தி தேர்தல் பணியை பாஜக செய்கிறது" என்கிறார்.

கே.பாலகிருஷ்ணனின் கருத்தை உற்று நோக்கினால், கடந்த சில மாதங்களில் மட்டும் தமிழ்நாட்டை குறிவைத்து மத்திய அமைச்சர்கள் அடுத்தடுத்து ஏன் வருகிறார்கள் என்ற உண்மை விளங்கும்.

மத்தியில் உள்ள பிரபலமான அமைச்சர்களைத் தவிர்த்து வேறு சில அமைச்சர்களும் ஆய்வு என்ற பெயரில் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். பிரதிமா பௌமிக் என்ற மத்திய அமைச்சர் வந்துபோன அதேவேகத்தில் பாரதி பவார் என்ற அமைச்சர் வந்தார். அடுத்து, மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் வந்தார். அடுத்து ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வந்துள்ளார். இவர், முதலமைச்சர் ஸ்டாலினையும் கலைவாணர் அரங்கத்தில் சந்தித்துப் பேசினார்.

ஆனால், ஆய்வுக்குச் சென்ற இடத்தில், 'தமிழக அரசு ஜல்சக்தி திட்டத்தைச் சரியாக அமல்படுத்தவில்லை' எனக் குற்றம் சுமத்தியுள்ளார். ''ஆனால் உண்மை, அதற்கு நேர்மாறாக உள்ளது'' என்கிறார் திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன்.

Central ministers are continue to review mettings in Tamil Nadu, What is the BJPs agenda?

அவர், "ஜல்ஜீவன் திட்டம் சரியாகவே தமிழ்நாட்டில் நடைபெறவில்லை கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியிருக்கிறார். ஆனால் அண்மையில் பத்திரிகைகளில் வந்த ஆதாரப்பூர்வமான தகவல் என்ன தெரியுமா? 'இந்தியாவிலேயே 2020 முதல் 22 வரை தமிழகம்தான் ஜல்ஜீவன் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி உள்ளது' என ஒன்றிய அரசே பாராட்டியுள்ளது. புள்ளிவிவரங்கள் அப்படித்தான் கூறுகின்றன. அப்படியென்றால் ஒன்றிய அமைச்சர் அப்பட்டமாகப் பொய் பேசுகிறாரா?'' எனக் கேள்வியெழுப்பினார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய வி.சி.க தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், "தமிழ்நாட்டை பாஜக குறிவைத்திருக்கிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்காக பல்வேறு கோணங்களில் அரசியல் காய்களை பாஜக நகர்த்துகிறது. எத்தனை மத்திய அமைச்சர்கள் வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவினால் கால் பதிக்க முடியாது. அவர்கள் கனவு பலிக்காது" என்கிறார். இதையடுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரிடம் பேசினோம். "ஒன்றிய அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு ஏதோ புதிதாக வரவில்லை. இது காலங்காலமாக நடப்பதுதான். ஒரு மாநிலத்தில் ஆய்வு செய்ய வருவதாக இருந்தால் அந்த மாநில அரசுக்குத் தெரிவிப்பார்கள். மாநில அரசும் நெறிமுறைகளின்படி (Protocol) அதை ஒருங்கிணைக்கும். ஆனால், இந்த அடிப்படை புரிதல்கூட இல்லாமல் அண்ணாமலை பேசுகிறார். அவர் பேச்சுக்குப் பெரிதாக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை" என்கிறார். 'அண்ணாமலை தெரியாமல் பேசுகிறாரா? அல்லது தெரிந்து கொண்டே மாநில அரசை சீண்டுகிறாரா?' என்பது வரக்கூடிய நாள்களில் தெரிந்துவிடும்.

"30 நாட்களில் தமிழ்நாடு வரும் 76 அமைச்சர்கள்" பாஜகவின் திட்டம் என்ன? அண்ணாமலை சொன்ன வார்த்தை!

English summary
In Tamil Nadu, the Union Ministers has stirred up a lot of controversy. Many political parties are accusing BJP of doing election work in the name of review meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X