அடுத்தடுத்து இலங்கை அட்டூழியம்- மேலும் 29 தமிழ்நாடு மீனவர்கள் கைது- மவுனம் கலைக்குமா மத்திய அரசு?
சென்னை: தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களை அத்துமீறி கைது செய்யும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட மத்தியில் ஆளும் பாஜக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
மீன்கள் இனப்பெருக்கத்துக்காக இந்த ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்பட்டிருந்தது. மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்த பின்னர் அனைத்து பகுதி மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 3,000 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்களில் கலையரசன் என்பவரது விசைபடகு நடுக்கடலில் பழுதானது. இந்த படகு காற்றின் திசையால் இலங்கை எல்லைக்குள் சென்றதாகவும் கூறப்பட்டது. இதனால் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் விசை படகையில் அப்படகில் இருந்த 9 மீனவர்களையும் கைது செய்தனர். மீன்பிடி தடை காலம் முடிந்ததால் கடலுக்கு சென்ற தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்திய கடலோர காவல்படையிடம் 9 தமிழ்நாட்டு மீனவர்களும் அவர்களின் விசைப்படகும் ஒப்படைக்கப்பட்டது. மத்திய அரசின் தலையீட்டால் தமிழ்நாட்டு மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களில் மேலும் 29 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்கள் காலம் காலமாக தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளிலேயே மீன்பிடிக்கின்றனர். ஆனால் இலங்கை கடற்படையினரோ பாரம்பரிய மீன்பிடி பகுதி பற்றிய புரிதலும் இல்லாமல் கச்சத்தீவு ஒப்பந்தத்தில் அனுமதி இருப்பதை பற்றிய தெளிவும் இல்லாமலும் எல்லை தாண்டி வந்துவிட்டனர் தமிழ்நாட்டு மீனவர்கள் எனக் கூறி கைது செய்வதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. மீன்பிடி தடை காலம் முடிவடைந்து கடலுக்கு சென்ற நாள் முதல் கொத்து கொத்தாக தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது மீனவர்களை பேரதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் இந்த துயர வாழ்வுக்கு மத்திய அரசு தரப்பில் பல்வேறு கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கூறப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களின் துன்பம் முடிவுக்கு வந்ததாக இல்லை. தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்த இலங்கைக்கு அந்நாட்டின் இந்தியாவுக்கான தூதரை அழைத்து கடுமையாக மத்திய அரசு கண்டிக்க வேண்டும்; தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி எல்லை குறித்த புரிதலுடன் மீனவர்கள் விவகாரத்தை கையாள வேண்டும் என்கிற கடும் அறிவுறுத்தலை மத்திய பாஜக அரசு இலங்கைக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications