Chakkaram: சென்னையில் அதிகனமழை வெளுத்து வாங்கும்.. வேலையை காட்டப் போகும் ”சக்கரம்..” தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட்
சென்னை: இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், சக்கரத்தால் டெல்டா முதல் கடலூர், சென்னை வரையிலான பகுதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். 99 சதவீதம் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
வங்கக் கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியிருக்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் எனவும், அப்படி புயலாக மாறும்பட்சத்தில் இதற்கு ஏமன் நாடு பரிந்துரைத்த டிட்வா புயல் என பெயரிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன் ட்வீட்
மேலும் இந்த புயலானது வட தமிழகம் ஆந்திராவுக்கு இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாளை மறுநாள் மற்றும் 30 ஆம் தேதிகளில் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் அதி கனமழை கூட பெய்ய வாய்ப்பு உள்ளதாக அலர்ட் செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும், சக்கரம் வேலையை காட்டப்போவதாகவும், இதனால் டெல்டா டூ சென்னை வரை அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
99% மிக மிக கனமழையை கொடுக்கும்
இலங்கை அருகே உள்ள சக்கரம் 99 சதவீதம் மிக மிக கனமழையை கொடுக்கும். டெல்டா முதல் கடலூர், சென்னை பெல்ட்டில் கனமழையை கொடுக்கும். நாகை முதல் சென்னைதான் ஹாட்ஸ்பாட்டாக இருக்கும். 29 மற்றும் 30 ஆம் தேதிகள்தான் முக்கிய நாளாக இருக்கும். புயல் சின்னம் தாமதம் ஆனாலும் கூட அதன் தாக்கம் டிசம்பர் 1 ஆம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை நவம்பர் மாதம் ஏமாற்றம் அளிக்க கூடிய ஒன்றாகவே உள்ளது. நுங்கம்பாக்கத்தில் 74 மி.மீட்டரும் சென்னை மீனம்பாக்கத்தில் 66 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. நவம்பர் மாதம் சென்னையில் பெய்யக்கூடிய இயல்பான மழை அளவே 375 மி.மீட்டர் ஆகும். எனவே, நவம்பர் மாதத்தில் மழை அளவு அதிகரிக்க இந்த சக்கரம் முக்கியமானதாக இருக்கும்" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை
தமிழகத்தில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இயல்பை விட குறைவாகவே மழை பெய்துள்ளது. முதல் இரு வாரங்கள் பெரிதாக மழையே இல்லாமல் இருந்தது. பின்னர் கடந்த வாரம் முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது. வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் மிக கனமழையும் வெளுத்து வாங்கியது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. தூத்துக்குடியிலும் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் அருவிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணைகளிலும் தண்ணீர் மட்டம் கடகடவென உயர்ந்தது. தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது.
அடுத்த ரவுண்டு ஆரம்பம்
இந்த நிலையில் நேற்றும் இன்று பெரிய அளவில் தென் மாவட்டங்களில் மழை இல்லை. ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் தான் புதிதாக உருவாகும் டிட்வா புயலால் மீண்டும் ஒரு ரவுண்டு கனமழை தொடரும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக 29, 30 மற்றும் டிசம்பர் 1 ஆம் தேதி கனமழை முதல் அதி கனமழை வரை வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார்கள். இதன் மூலமாக நவம்பர் மாதத்திலும் இயல்புக்கு சமமான மழை பெய்துவிடும் என கணித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications