ஜில்லென்று பெய்த சாரல் மழை... சட்டென்று மாறிய வானிலை - 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது.
சென்னை: தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்த நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் குளிர்ந்த காற்று வீசி சாரல் மழை பெய்தது.
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை பெய்து வரும் நிலையில் அவ்வப்போது வெயிலும் அக்னி நட்சத்திர காலம் போல சுட்டெரித்து வருகிறது. மாலை நேரங்களில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் 5 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. சென்னை, மதுரை விரகனூர் அணைக்கட்டு பகுதியில் 4 செமீ மழையும், பெரம்பூர், புதுக்கோட்டை, மேலூரில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
திருப்பூர், நீலகிரி ,கோயம்புத்தூர்,சேலம், கடலோர மாவட்டங்கள் அதனையொட்டி உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளை மற்றும் நாளை மறுநாள் கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வருகின்ற 20ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
வருகின்ற 21ஆம் தேதி திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பான்மையான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்
இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை வடக்கு ஆந்திர கடலோரப் பகுதி, தெற்கு ஒடிசா கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய இடங்களில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications