9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு - செப்.6 வரை கவனம் மக்களே
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரள மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 13 செமீ மழை பதிவாகியுள்ளது, கலசப்பாக்கத்தில் 12 செமீ மழையும் புதுக்கோட்டை, அதிராமபட்டினத்தில் தலா 8 செமீ மழையும் பதிவாகியுள்ளது. செய்யார் 7 செமீ, வட்டணம், தாமரைப்பக்கத்தில் தலா 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது. செங்கம் 5, அவலூர்பேட்டையில் 4 செமீ மழையும் பதிவாகியுள்ளது. பொண்ணை அணை, திருப்பத்தூர், கோவிலான்குளம், காரைக்குடி, ஓமலூரில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. கலவை, ஊத்துக்குளி, உசிலம்பட்டி, கொரட்டூரில் தலா 2 செமீ மழையும் பேச்சிப்பாறை , ஹரூர் , எமரால்டு, திருச்சிராப்பள்ளி விமான நிலையம் தலா 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இன்று முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை மைய ஆய்வு இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளைய தினம் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 3ஆம் தேதி நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போல 4ஆம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கேரள மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்று முதல் 6ஆம் தேதி வரைக்கும் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications