இஸ்ரேல் போர் தீவிரமானால்.. முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆபிஸை இந்தியாவிற்கு மாற்ற வாய்ப்பு?
சென்னை: இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னணி ஐடி நிறுவனங்கள் கதிகலங்கி போய் கிடக்கின்றன. இந்நிலையில் இஸ்ரேல் போர் தீவிரம் அடைந்தால் அங்குள்ள ஐடி நிறுவனங்கள், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் தங்கள் கிளைகளை திறக்க வாய்ப்பு உள்ளதாக தொழில் நுட்ப வல்லுநர்கள் சொல்கிறார்கள்
அமெரிக்கா பெரியப்பா என்றால், இங்கிலாந்து சித்தப்பா, ஜெர்மன் அத்தை, இத்தாலி மாமா என்கிற அளவிற்கு மேற்கத்திய நாடுகளின் பின்னிப்பிணைந்த உறவில் இருக்கும் நாடு தான் இஸ்ரேல். மேற்கத்திய நாடுகளில் எப்படி ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றனவோ அதுபோல் இஸ்ரேலிலும் ஐடி நிறுவனங்கள் அதிக அளவில் இருக்கின்றன.

உலகம் முழுவதும் உள்ள ஐடி துறைகள் கணிசமாக இஸ்ரேலில் இயங்கி வருகின்றன. மென்பொருள் நிறுவனங்கள், சைபர் செக்யூரிட்டி நிறுவனங்கள் ஏராளமான இஸ்ரேலில் இருப்பதால், இந்தியாவின் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் தேடிச்சென்று இஸ்ரேலில் கடை விரித்துள்ளன. இந்தியாவின் ஐடி நிறுவனங்களான டிசிஎஸ்,விப்ரோ, டெக் மஹிந்திரா, இன்போசிஸ், ஹெச்சிஎல் உள்ளிட்டவை இஸ்ரேலில் உள்ளன.
அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகளின் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், இன்டெல் உள்பட 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் லட்சக்கணக்கான ஊழியர்களுடன் அங்கு இயங்கி வருகின்றன.இஸ்ரேல் உளவு சாப்ட்வேர்கள் உலக அளவில் பிரபலமானவை ஆகும். உலகின் பல்வேறு நாடுகளுமே இஸ்ரேலின் உளவு மென்பொருள்களை பயன்படுத்துகின்றன.
தற்போது இஸ்ரேல் ஹமாஸ் இடையே போரின் கோரத்தாண்டவம் காரணமாக ஐடி நிறுவனங்கள் கலக்கத்தில் இருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்கள் இஸ்ரேலில் இயங்கி வரும் நிலையில், அவை நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இந்நிலையில் இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடந்து வரும் போர், தற்போது உள்ள நிலைமையை தலைகீழாக மாற்றிவிடும் என்று சோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான இந்த போர் பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்த ஸ்ரீதர் வேம்பு,தொழில் நுட்ப துறைக்கு நிச்சயமற்ற தன்மை ஏற்படும் என்று எச்சரித்தார்.
ஏற்கனவே உக்ரைன்-ரஷ்யா போரால் பல ஐடி நிறுவனங்கள் பெரும் இன்னல்களை சந்தித்தன. இதனால் வேலை இழப்பு போன்ற மோசமான நிலையை ஐடி ஊழியர்கள் எதிர்கொண்டு வரும் நிலையில், இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் இன்னும் நிலைமையை மோசமாக்கும் என்றும் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். ஏற்கனவே உலக அளவில் கடன்கள் அதிகரித்துவரும் நிலையில்,புதிய கடன்களை ஐடி நிறுவனங்கள் தவிர்ப்பது நல்லது என்றும் ஸ்ரீதர் வேம்பு அறிவுறுத்தி உள்ளார்.
இதனிடையே இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தீவிரம் அடைந்தால், இஸ்ரேலில் அலுவலகங்களை கொண்டுள்ள உலகலாவிய தொழில் நுட்ப நிறுவனங்கள், வணிக நடவடிக்கையை இந்தியா உள்பட பிற இடங்களுக்கு மாற்றக்கூடும் என்று தொழில்துறை வல்லுநர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications