தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் மாற்றம்.. நாளை நாகையில் புதிய பிளான்.. போலீசார் அனுமதி
நாகப்பட்டினம்: நாகையில் தவெக தலைவர் விஜய் பரப்புரை பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புத்தூர் ரவுண்டானாவிற்கு பதிலாக அண்ணா சிலை அருகே உரையாற்ற தவெக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். நாளை நண்பகல் 12.30 மணியளவில் நாகையில் உள்ள புத்தூர் அண்ணா சிலைக்கு விஜய் வருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை வேகப்படுத்தி வருகின்றன. முதல் முறையாக தேர்தல் களத்தைச் சந்திக்கும் தவெகவும் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறது.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை கடந்த சனிக்கிழமை தொடங்கினார். திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபட்டார். விஜய் டிசம்பர் மாதம் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.
திருச்சி மரக்கடை பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த அவரை வரவேற்க கூடியிருந்த தொண்டர்கள் ஆர்வமிகுதியில் பாதுகாப்பு தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஓடி வந்தனர். விஜய்யின் பிரச்சார வாகனம் புறப்பட்டதும், அவரது வாகனத்துக்கு முன்பும், பின்பும் ஏராளமான வாகனங்கள் பின்தொடர்ந்து சென்றன.
மேலும், அவரது வாகனத்தை ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்து கொண்டதால், விமான நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பிரச்சார இடமான மரக்கடை செல்ல சுமார் 5 மணி நேரம் ஆனது. இந்தக் கூட்டத்தில் குழந்தைகளுடன் பெண்கள், சிறுவர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காத்திருந்தவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாததாலும், 10 மணிக்கு மேல் வெயில் கடுமையாக இருந்ததாலும் 15 பேர் மயக்கமடைந்தனர்.
தவெக தலைவர் விஜய் அடுத்த வாரம் சனிக்கிழமை (செப்டம்பர் 20 ஆம் தேதி) நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். நாகை அவுரி திடலில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள தவெக தரப்பில் போலீசில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், தவெக அனுமதி கேட்ட அதே நாளில் திமுகவினர் கூட்டம் நடத்த ஏற்கனவே பதிவு செய்துள்ளதால் போலீசார் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியானது.
நாகை அவுரி திடலில் செப்டம்பர் 20 ஆம் தேதி திமுகவினர் கூட்டம் நடத்துவதற்கு நகராட்சி அலுவலகத்தில் முன்பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, 7 இடங்களைக் குறிப்பிட்டு தவெக மாவட்டச் செயலாளர் சுகுமாரன் அனுமதி கோரியிருந்தார். தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்வதற்காக கீழ்வேளூர் ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்பாடி மைதானம், நாகூர் புதிய பேருந்து நிலையம், வேளாங்கண்ணி ஆர்ச் உள்ளிட்ட 7 இடங்களில் அனுமதியளிக்க காவல்துறையில் அக்கட்சியினர் கோரியிருந்தனர்.
இதனையடுத்து, புத்தூர் ரவுண்டானா பகுதியில் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை அனுமதி அளித்தது. தொடர்ந்து, புத்தூர் அண்ணா சிலை அருகே விஜய் உரையாற்றக் கோரிய அக்கட்சியினரின் கோரிக்கைக்கும் காவல்துறை அனுமதி அளித்துள்ளனர். இருப்பினும், பகல் 12.30 மணியளவில் பேசத் தொடங்கி, அரை மணிநேரத்திலேயே விஜய் முடிக்க வேண்டும் என்று கூறிய காவல்துறை, பரப்புரையின்போது பொதுச் சொத்துக்கு தொண்டர்களால் எவ்வித சேதமும் ஏற்படக் கூடாது என்றும், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications