பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத்தை கஸ்டடியில் எடுக்கும் போலீஸ்..கூட்டாளி 'தலை'களை விசாரிக்கிறது
சென்னை: கோவில் சீரமைப்புக்காக ரூ34 லட்சம் நிதி திரட்டி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட பாஜக ஆதரவாளரான யூ டியூபர் கார்த்திக் கோபிநாத்தை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். தங்களது கஸ்டடியில் எடுத்து கார்த்திக் கோபிநாத்தின் இந்த மோசடியில் தொடர்புடைய முக்கிய தலைகள் குறித்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான கோவில் ஒன்றில் சிலைகளை மர்ம நபர்கள் உடைத்திருந்தனர். இந்த சிலைகள் உடைப்பு தொடர்பாக மனநோயாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவிலுக்காக நிதி திரட்டல்
ஆனால் கோவில் சிலைகளை மாற்று மதத்தினரே உடைத்துவிட்டதாக சமூக வலைதளங்களில் இந்துத்துவா அமைப்பினர் தீவிர பிரசாரம் செய்தனர். அத்துடன் பாஜக ஆதரவாளரான இளையபாரதம் எனும் தலைப்பில் யூடியூப் நடத்தி வந்த கார்த்திக் கோபிநாத், இணையம் மூலமாக இக்கோவில் சீரமைப்புக்கு நிதி திரட்டுவதாகவும் அறிவித்தார்.

மோசடி புகார்
சிறுவாச்சூர் கோவில் சீரமைப்புக்காக மொத்தம் ரூ34 லட்சம் நிதி திரட்டி இருக்கிறார் கார்த்திக் கோபிநாத். இதில் ரூ6 லட்சத்தை தமது சொந்த வங்கி கணக்குக்கு மாற்றியிருந்தார். மேலும் இந்து அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் கோவில் சீரமைப்புக்கு கார்த்திக் கோபிநாத் நிதி வசூல் செய்து மோசடி செய்ததாகவும் சென்னை ஆவடி போலீசில் புகார் கூறப்பட்டது.

கார்த்திக் கோபிநாத் கைது
இப்புகாரின் அடிப்படையில் ஆவடி போலீசார் கார்த்திக் கோபிநாத்தை நேற்று கைது செய்தனர். கார்த்திக் கோபிநாத்தின் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியும் கார்த்திக் கோபிநாத் கைதுக்கு கண்டனம் தெரிவித்திருப்பதுடன் அவருக்கு ஆதரவாக சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

கார்த்திக் கோபிநாத்துக்கு போலீஸ் கஸ்டடி?
இதனையடுத்து நீதிபதி முன் கார்த்திக் கோபிநாத் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே கார்த்திக் கோபிநாத்தை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அப்போது, கார்த்திக் கோபிநாத்தின் மோசடிக்கு உடந்தையாக இருந்த பாஜக தலைவர்கள் குறித்து கேள்வி கேட்கவும் போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications