பாஸ்ட் புட் கடைகளில் இதை பார்த்தால் உடனே போன் பண்ணுங்க.. செங்கல்பட்டு கலெக்டர் முக்கிய அறிவிப்பு
சென்னை: பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் ஆனது அரசால் தடை செய்யப்பட்டு உள்ளதால் உணவு வணிகர்கள் அதனை தயாரிக்கவோ விற்பனை செய்யவோ கூடாது. அந்த வகையான மையோனைஸை நுகர்வோர்களும், தவிர்க்க வேண்டும். மையோனைஸ் தயாரிப்பது, வினியோகம் மற்றும் விற்பனை செய்வது ஆகியவை ஓராண்டுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தடை செய்யப்பட்ட மையோனைஸ் விற்பனை நடந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என செங்கல்பட்டு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைக்கு தமிழ்நாடு முழுக்க இரவுகளில் உணவங்களில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணும் உணவாக தந்தூரி, பார்பிகியூ, சவர்மா எனப் பல்வேறு அரேபிய உணவுகள் இருக்கின்றன. எங்கு திரும்பினாலும் சவர்மா கடைகளும், பார்பிகியூ கடைகளையும் பார்க்க முடியும். தந்தூரியும் கிரில் சிக்கனும் அதிகம் பேரால் விரும்பி உண்ணப்படுகிறது. இந்த உணவு வகைகளுக்கு முக்கியமான ஸைட் டிஷ்களில் ஒன்று மையோனைஸ்.

சமைக்கப்படாத முட்டை, தாவர எண்ணெய், வினிகர் மற்றும் சில மசாலா பொருட்கள் கலந்து செய்யப்படும் உணவு தான் மையோனைஸ். அதில் பச்சை முட்டை பயன்படுத்துவதால், கிருமி தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. முறையற்ற வகையில் மையோனைஸ் தயார் செய்வது, முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மையோனைஸ் உடல் நலத்திற்கு அதிக பாதிப்பை விளைவிக்கிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும், மையோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை. இந்தத் தடை உத்தரவு ஏப்ரல் 8-ம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் ஆனது அரசால் தடை செய்யப்பட்டு உள்ளதால் உணவு வணிகர்கள் அதனை தயாரிக்கவோ விற்பனை செய்யவோ கூடாது. அந்த வகையான மையோனைஸ் நுகர்வோர்களும், தவிர்க்க வேண்டும். மயோனைஸ் தயாரிப்பது, வினியோகம் மற்றும் விற்பனை செய்வது ஆகியவற்றை ஓராண்டுக்கு தடை செய்து அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு உத்தரவை மீறி கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையில் இருந்து மையோனைஸ் தயாரிப்பது அல்லது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் மேற்படி மையோனைஸ் ஆனது பறிமுதல் செய்யப்பட்டு உணவு வணிகர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பச்சை முட்டையிலிருந்து தயாரித்த மையோனைஸை பயன்படுத்த வேண்டாம். பொதுமக்கள் உணவு சம்பந்தமான புகார்களுக்கு 9444042322 என்ற எண்ணுக்கோ தமிழ்நாடு நுகர்வோர் ஆப் என்ற செயலியிலோ புகார் தெரிவிக்கலாம்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications