மெரினா பீச்சில் விமான சாகசம் பார்க்க போறீங்களா.. வாகனங்களை எங்கே ‘பார்க்’ செய்வது.. இதோ விவரம்
சென்னை: சென்னை மெரினாவில் இன்று இந்திய விமானப்படையின் 92 வது ஆண்டு விழாவையொட்டி விமான சாகச நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியை காண வருபவர்களுக்கு ஏதுவாக இன்று சென்னையில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல வாகனங்களில் வருபவர்களுக்கு வசதியாக 22 இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவையொட்டி, சென்னையில் மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக கடந்த 2003 ஆம் ஆண்டு விமான கண்காட்சி ந்டைபெற்றது. 21 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விமான கண்காட்சி நடபெறுவதால் மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. 72 விமானங்களில் விமானப்படை வீரர்கள் சாகசங்களை நடத்த உள்ளனர்.

இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இந்த சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த பிரமாண்ட சாகச நிகழ்ச்சியை பொதுமக்களும் கண்டுகளிக்க முடியும். விமான சாகச நிகழ்ச்சிக்காக கடந்த சில நாட்களாகவே விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன. திடீரென வானில் சீறிப்பாய்ந்த விமானங்களை கண்டு சென்னை மக்கள் மெய்சிலிர்த்தனர்.
இன்று நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிட்டதட்ட 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். காணும் பொங்கல் தினத்தில் மக்கள் கூடுவது போல நாளை மெரினாவில் அதிக அளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியை காண வருபவர்களுக்கு ஏதுவாக கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல போக்குவரத்து கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் வருபவர்களுக்கு 22 இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* காமராஜர் சாலை - கடற்கரை சாலை (விவிஐபி., விஐபிக்கள் வாகனங்கள் மட்டும்), மாநில கல்லூரி, சுவாமி சிவானந்தா சாலை, லேடி வெலிங்க்டன் கல்லூரி (நீல வண்ண பாஸ் மட்டும்).
* சாந்தோம் சாலை - சி.எஸ்.ஐ. காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பள்ளி, செயின்ட் பெட்ஸ் மேல்நிலைப்பள்ளி, மைதானம், புனித சாந்தோம் பள்ளி, கதீட்ரல் ஆரம்ப பள்ளி, சாந்தோம் சமுதாய கூடம், லூப் சாலை.
* ஆர்.கே.சாலை - லைட் ஹவுஸ் பறக்கும் ரெயில் நிலைய சாலை, என்.கே.டி. பள்ளி, ராணி மேரி கல்லூரி, புனித எபாஸ் பள்ளி.
* வாலாஜா சாலை - கலைவாணர் அரங்கம், ஓமந்தூரார் மருத்துவ மைதானம் (பிரஸ் கிளப் சாலை நுழைவு), விக்டோரியா விடுதி மைதானம்.
* அண்ணாசாலை - தீவுத்திடல் மைதானம், பொதுப்பணித்துறை மைதானம், மன்றோ சிலை முதல் பல்லவன் சாலை சந்திப்பு வரை, சிந்தாதிரிப்பேட்டை பறக்கும் ரெயில் நிலைய வளாகம்.
மேற்கண்ட வாகன நிறுத்தும் இடங்கள் காலை 9.30 மணிக்கு மூடப்படும் என்றும், இந்த நிகழ்ச்சியை பார்வையிட விரும்பும் பார்வையாளர்கள் விரைவில் வருகை தர வேண்டும் என்றும் போலீசார் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications