அடேங்கப்பா 1 லிட்டர் பாலே பல ஆயிரமாம்! கோடி கோடியா சம்பாதிக்கலாம்! கழுதை பால் பண்ணை மோசடி தெரியுமா?
சென்னை: ஈமு கோழி, எம்எல்எம் மோசடி வரிசையில் சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல கழுதைப் பண்ணை வைத்தால் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனக்கூறி 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த சிலர் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் இருந்து கொண்டு தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் கைவரிசை காட்டிய கும்பலை தற்போது போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு, கோவை, திருப்பூர், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் ஈமு கோழி மோசடி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஈமு கோழியின் முட்டை பத்தாயிரம் ரூபாய் போகும், இறகு மட்டுமே ஆயிரக்கணக்கில் விற்பனையாகும், ஒரு கிலோ கறி மட்டுமே 2000 ரூபாய் எனக்கூறி பலரின் தலையில் ஈமூ கோழியை கட்டி விட்டனர் ஒரு கும்பல்.

தொடர்ந்து பணத்துக்கு ஆசைப்பட்டு அந்த கோழிகளை வாங்கியவர்கள் ஒரு கட்டத்தில் பராமரிக்க முடியாமல் திணறியதும், கொத்துக்கொத்தாக ஈமு கோழிகள் செத்துப்போனதும் தமிழகம் அறிந்தது. இதை மையமாக வைத்து சதுரங்க வேட்டை படம் வெளியானது.
அதிலும் வகை வகையான பல மோசடிகள் படம் போட்டு காட்டப்பட்டிருக்கும். இந்த நிலையில் அந்த வகையில் அதேபோல கழுதைப் பண்ணை மூலம் இலட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என 100 கோடி ரூபாய் மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் எழுந்திருக்கிறது. கிராம பகுதிகளில் இன்று கூட கழுதைகளை ஓட்டி வருபவர்கள் சங்குகளில் அதன் பாலை பீய்ச்சி எடுத்து தருவார்கள்.
கழுதை பால் குடித்தால் உடம்பில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெருகும், குரல் வளம் நன்றாக இருக்கும் என கூறுவார்கள். ஆனால் மருத்துவ ரீதியாக அது உண்மையா என்பது தெரியவில்லை. என்றாலும் தற்போது வரை கழுதை பால் விற்பனை களைகட்டி வருகிறது. ஒரு சிறிய சங்கு 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் பால் ஆயிரம் ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை விற்பனையாவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த விஷயத்தை பயன்படுத்தி ஒரு கும்பல் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயிகளை ஏமாற்றி கோடி கணக்கில் பணம் மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னையில் உள்ள டாங்கி பேலஸ் பிரான்சைஸி என்ற நிறுவனம் கொரோனா நோய் தொற்று காலம் முடிவடைந்த உடன் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் கழுதை பால் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும் என விளம்பரம் செய்திருக்கின்றனர். மேலும் கழுதை பண்ணை வைத்து அதன் பாலைக் கறந்து எங்களுக்கே கொடுத்தால் ஒரு லிட்டர் 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை வாங்கிக் கொள்கிறோம். ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் என்று பால் கிடைத்தாலும் ஒரு நாளைக்கு மட்டும் கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாயும் மாதத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என கூறியுள்ளனர்.
மேலும் மருத்துவம் தீவனம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தாங்களே பார்த்துக் கொள்வோம் எனக் கூறி ஒவ்வொருவரும் ஐந்து லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என கூறி இருக்கின்றனர். ஒரு பெண் கழுதையை ஒன்றரை லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்திருக்கிறார்கள். முதலில் மூன்று மாதங்களுக்கு கழுதை பாலை வாங்கி அதற்கு ஈடாக பணம் கொடுத்திருக்கின்றனர். அதனை தொடர்ந்து 18 மாதங்களாக அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.
தொடர்ந்து சிலர் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது வெளிநாட்டு ஆர்டர்களுக்காக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்ததாகவும். இனிமேல் பாலை நாங்கள் ரெகுலராக வாங்கி கொள்வோம் என கூறி மீண்டும் பணத்தை கறந்து இருக்கிறார்கள். தொடர்ந்து பராமரிப்பு செலவுகளுக்கு என பலருக்கு காசோலைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவற்றை டெபாசிட் செய்த போது வங்கி கணக்கில் பணம் இல்லை என அவை பவுன்ஸ் ஆகி இருக்கின்றன.
இதை அடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னையைச் சேர்ந்த டாங்கி பேலஸ் பிரான்சைஸி நிறுவனத்தின் உரிமையாளர்களான பாபு, உலகநாதன், கிரி சுந்தர், பாலாஜி, ரமேஷ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்திருக்கிறார்கள் விவசாயிகள். இது தொடர்பாக விசாரித்த போது தெலுங்கானா மட்டும் இன்றி இந்த கும்பல் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும் பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவானது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications