சென்னையில் இன்று ரயில்கள் ரத்து.. இந்த ரூட்ல போறவங்க பேருந்துகளை பயன்படுத்தலாம்.. விவரம் இங்கே!
சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலைய பணிமனை பராமரிப்பு பணி காரணமாக இன்று சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், 50 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரத்தை பார்க்கலாம்.
சென்னையை பொறுத்தவரை மின்சார ரயில்கள் மூலம் தினசரி பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகம். செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம், சென்னை கடற்கரை முதல் கும்மிடிப்பூண்டி வரை மின்சார ரயில்கள் 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் இந்த ரயில்களில் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர்.

சென்னையில் ரயில் வழித்தடங்கள் பராமரிப்பு பணிகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதனால் மின்சார ரயில்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று தாம்பரம் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால் தினமும் மின்சார ரயில்களை பயன்படுத்தும் பயணிகள் இதற்கேற்ப தங்களின் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது தெற்கு ரயில்வே.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், தாம்பரம் யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், 17 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் ரயில்கள் இயக்கப்படாது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்கள் அட்டவணைப்படி இயக்கப்படும்.
ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக 25 முதல் 40 நிமிட இடைவெளியில் கடற்கரை - பல்லாவரம் இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மாலை 5 மணிக்கு மேல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. எனவே, ரயில் பயணிகள் தங்களின் பயணத்தை திட்டமிட்டுக் கொண்டால் சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்காது.
ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், 50 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே, அந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்து கழகம் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள், தி.நகர் பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் மற்றும் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இந்த பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications