ஜாபர் சாதிக் ஜாமீன் மனு தள்ளுபடி! அமலாக்க துறை கோரிக்கையை ஏற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக், அவரின் சகோதரர் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அதைத் தள்ளுபடி செய்து இப்போது உத்தரவிட்டுள்ளது.
போதைப் பொருள் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு இருந்தார்.

அவர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டதாகச் சொல்லி அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை அவரை கடந்த ஜூன் 26ம் தேதி கைது செய்தது. அதைத் தொடர்ந்து ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் என்பவரையும் கடந்த ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறை கைது செய்தது.
ஜாபர் சாதிக் மீதான குற்றப்பத்திரிக்கை:
இந்த சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், சுமார் 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனா பானு, ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீம் இயக்குநர் அமீர் உள்ளிட்ட 12 ஆகியோர் பெயர்கள் இடம்பெற்று இருந்தது.
சட்டவிரோதமாக ரூ. 49 கோடி வருவாய் ஈட்டி அதைக் கொண்டு சென்னை உட்பட பல்வேறு இடங்களில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும், சுமார் 4.38 கோடி மதிப்பிலான சொகுசு ரூ. 4.28 கோடி மதிப்பிலான சொகுசு கார்களையும் அவர் வைத்திருப்பதாகக் கூறப்பட்டு இருந்தது.
இந்தச் சூழலில் தான் இந்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தனர். கைது செய்யப்பட்ட தங்களிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தி முடித்துவிட்டதாகவும் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று அந்த ஜாமீன் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த ஜாமீன் மனு இன்று சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வேலவன் முன்பு விசாரணைக்கு வந்தது. இருப்பினும், அமலாக்கத் துறை இதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழக்கினால் அவர் மீண்டும் இதேபோன்ற தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாகவும் சாட்சிகளைக் கலைப்பது, ஆவணங்களை அழிப்பதிலும் ஈடுபட வாய்ப்பு இருப்பதால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை வாதிட்டது.
ஜாபர் சாதிக் ஜாமீன் மனு தள்ளுபடி:
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தார். இந்தச் சூழலில் ஜாமீன் மனு தொடர்பாக நீதிபதி எழில் வேலன் இன்று தீர்ப்பளித்தார். தற்போதைய நிலையில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் இருவரும் ஜாமீன் வழங்க முடியாது என்று கூறிய நீதிபதி எழில் வேலன், ஜாமீன் இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications