பூண்டி, புழல் ஏரிகளை தொடர்ந்து.. திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி.. வெள்ள அபாய எச்சரிக்கை!
சென்னை: சென்னையில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதையடுத்து பூண்டி, புழல் ஏரிகளில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. சில நிமிடங்களுக்கு முன்பாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தும் உபரி நீர் இன்று வெளியேற்றப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று மாலையில் இருந்து விடாமல் மழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தீவிர மழை பெய்து கொண்டு இருக்கிறது.
சென்னை தவிர்த்து அதிகபட்சமாக திருச்சியில் 123 மிமீ மழை வரை பெய்துள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகளிலும் 70 மிமீ மழை பெய்துள்ளது. புதுக்கோட்டையில் 62 மிமீ மழை பெய்துள்ளது.

செம்பரம்பாக்கம்
சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 21.30 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 23 அடி வரை நீர் தேக்க முடியும். ஏரிக்கு நீர் வரத்து 600 கன அடியாக உள்ளது. மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இன்று வெளியேற்றம்
இன்று மாலைக்குள் செம்பரம்பாக்கம் நிரம்பும் வாய்ப்பு உள்ளது. இதனால் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. பிற்பகல் 1.30 மணிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட தொடங்கி உள்ளது. இதனால் அடையாறு ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளம்
வளதளமேடு, நத்தம், குன்றத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாய எச்க்காரிகை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு செம்பரம்பாக்கம் ஏரி நிர்வாகிகளும், பேரிடர் தடுப்பு படை அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகிறார்கள். அணை பகுதியை முறையாக கண்காணிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதால் இங்கு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு செய்து வருகிறார்கள்.

புழல்
புழல் ஏரிக்கும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. புழல் ஏரியின் நீர் இருப்பு 19.30 அடியாக உள்ளது. புழல் ஏரியில் 21 அடி வரை நீர் தேக்க முடியும். புழல் ஏரியும் இன்று மாலைக்குள் நிரம்பும் வாய்ப்புகள் உள்ளன. புழல் ஏரியின் நீர் வரத்து 1487 கன அடியாக அதிகரித்துள்ளது.

புழல் ஏரி திறப்பு
நீர் வரத்து அதிகரிப்பதால் தற்போது புழல் ஏரி திறக்கப்பட்டுள்ளது. புழலில் இருந்து 1500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகரை, புழல், வடபெரும்பாக்கம், மஞ்சுபாக்கம் ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பூண்டி ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

அதிகரிப்பு
அதன்பின் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததால் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் விநாடிக்கு 4094 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications