சென்னை மாநகராட்சி பட்ஜெட் நாளை தாக்கல்...வரி உயருமா? அறிவிப்புகள் என்ன? எகிறும் எதிர்பார்ப்பு
சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் நாளைய தினம் தாக்கல் செய்யப்படுகிறது. முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் 6 ஆண்டுகளுக்கு பிறகு நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி மன்றத்தில் 50 சதவிகித பெண் கவுன்சிலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் பெண் மேயராக இருக்கும் நிலையில் வரிவிதிப்பு நிலைக்குழு தலைவரும் பெண்ணாக நியமிக்கப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது சிறப்பாகும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கடந்த 4 ஆண்டுகளாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் அப்போதைய கமிஷனர்களால் மறைமுகமாகவே வெளியிடப்பட்டு வந்தது. இதனால் பெரிய அளவில் புதிய திட்டங்கள் இல்லாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் 6 ஆண்டுகளுக்கு பின்னர் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது.
சென்னையின் 49வது மேயராக ஆர்.பிரியா பதவி ஏற்றார். இதைத்தொடர்ந்து நிலைக்குழு, மண்டலக்குழு, நியமனக் குழுக்களுக்கான தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் வரும் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளைய தினம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு தான் கடைசியாக சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது அன்றைய வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் சந்தானம், அன்றைய மேயர் சைதை துரைசாமி முன்னிலையில் 'பட்ஜெட்' தாக்கல் செய்தார். அந்த வகையில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் நாளைய தினம் மாமன்ற கூட்டத்தில் 'பட்ஜெட்' அறிக்கையை மேயர் ஆர்.பிரியா தலைமையில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்வார். அவர் நிதிநிலை அறிக்கையை முழுவதுமாக படித்து முடிப்பார்.

சிங்காரச் சென்னை
பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகளை மேயர் பிரியா வெளியிடுகிறார். நிதிநிலை அறிக்கையில் ரூ.3,000 கோடி அளவுக்கு புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மழைநீர் வடிகால், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிகிறது. சிங்கார சென்னை திட்டத்திற்கு அரசு ஒதுக்கிய நிதியில் இருந்து நகரை அழகுப்படுத்த தேவையான பணிகளும் அதற்கான நிதியும் ஒதுக்கப்படுகிறது.

மழை வெள்ளத்திற்கு நிரந்தர தீர்வு
வெளிநாட்டினரையும், பிற மாநிலத்தவரும் சென்னை பெருநகருக்குள் நுழையும் போது கவரக்கூடிய வகையில் ஓவியங்கள், தமிழர்களின் சிறப்புகளை விளக்கும் படைப்புகள் இடம் பெறுவது, பொது இடங்களை அழகுபடுத்துதல், பசுமை மற்றும் தூய்மை நகரமாக மாற்றுதலுக்கான பணிகளுக்கு முக்கியம் கொடுக்கப்படும். இதே போல பருவமழை காலத்தில் சென்னையில் மழை நீர் தேங்கி வெள்ள பாதிப்பை ஏற்படுத்தாமல் நிரந்தர தீர்வுகாண அடிப்படையான வடிகால் கட்டமைப்புகளை ஏற்படுத்தி பாதுகாக்க நடவடிக்கை, தரமான சாலைகள், பொது சுகாதாரம், குப்பை, கொசுவில்லா நகரமாக மாற்றுதல் போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாநகராட்சி பட்ஜெட்டில் மழைநீர் வடிகால் துறைக்கு ரூ.1000 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.3 ஆயிரம் கோடி வரவு செலவுத் திட்டம்
மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம், மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை விரைவுப்படுத்துதல், பாரம்பரிய கட்டிடங்களை பராமரித்தல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி மதிப்பிற்கு வரவு-செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 50 பக்கங்கள் கொண்டதாக மாநகராட்சி பட்ஜெட் இருக்கும் என்று கூறப்படுகிறது.

6 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கல்
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அன்று தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தை தொடர்ந்து 2022-23 ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்துக்கான ஒப்புதல் அளிக்கப்படும். 6 ஆண்டுகளுக்கு பின்னர் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் சென்னை மாநகர மக்கள் மத்தியில் புதிய நலத்திட்டங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சொத்து மற்றும் இதர வரிகள் உயர்த்தப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications