சென்னை வேளச்சேரியில் 6 கோடி மதிப்புள்ள நிலம்.. பொக்லைனுடன் வந்த அதிகாரிகள்.. அதிரடியாக மீட்பு
சென்னை: சென்னை வேளச்சேரியில் இருந்து தரமணி செல்லும் சதுப்பு நில பறக்கும் ரயில்வே சாலையில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து விளையாட்டு திடல் அமைக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. ஏற்கனவே நீதிமன்ற உத்தரவின் பேரில் இப்பகுதியில் இருந்த நிலங்களை மீட்டனர். இந்தநிலையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பகுதியில் ஒரு நிலம் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக புகாரின் பேரில் 2 கிரவுண்ட் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.
சென்னை வேளச்சேரியில் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த நீர்வழிப்பாதை மீட்கப்பட்ட நிலையில், அங்கு மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவானதாக புகார்கள் எழுந்தது. 1,630 ஏக்கர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையொட்டி 200 ஏக்கர் அரசு நிலம் இருந்தது, இந்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தபடி வந்தாக கூறப்படுகிறது. இதில், 10 ஏக்கருக்கு மேல் நிலம் மட்டும், நீதிமன்ற உத்தரவையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன் அரசால் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சதுப்பு நிலத்திற்கு செல்லும் நீர்வழிபாதையை சிலர் மீண்டும் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வேளச்சேரி டான்சிநகர் நலச்சங்கத்தினர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றத்தில், 15 கோடி ரூபாய் மதிப்புடைய, 5 கிரவுண்ட் இடம் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதாக கூறப்பட்டது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவையடுத்து,120க்கும் மேற்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு, கடந்த ஜூன் மாதம், 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. ஒரு மருத்துவமனைக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. மீதமுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில மீட்கப்பட்ட நீர்வழித்தடத்தில் மீண்டும் மண் கொண்டு நிரப்பி, கட்டடம் கட்டப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினார்கள. இதுகுறித்து, வேளச்சேரி பகுதி நலச்சங்கத்தினர், மாநகராட்சி, வருவாய் துறையிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி அடையாறு மண்டல உதவி கமிஷனர் ஹர்டீன் ரொஸரியோ தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் இடித்து அகற்றி நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.6 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் இன்னும் எவ்வளவு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும், முழுமையாக அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா என்பதை அதிகாரிகள் விளக்கம் அளித்தால் தான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications