செம ஸ்பீடு! பெண்களுக்கு ரூ.1000.. விண்ணப்பம் பெற முகாம்: ஜெட் வேகத்தில் களமிறங்கிய சென்னை மாநகராட்சி
சென்னை: மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. பயனாளிகள் விண்ணப்பங்களைப் பெற ஜூலை 3வது வாரம் முதல் சிறப்பு முகாம்களை நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக தங்களது தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. ஸ்டாலின் முதல்வரானது முதலே, இந்த திட்டம் குறித்து பெண்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. திமுக அரசு ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

உரிமைத்தொகை திட்டம் ஆரம்பம்: மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்த சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐ.ஏ.எஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நியமனம் செய்யப்பட்டார். இந்தத் திட்டம் தொடர்பாக நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்படுவதாக அறிவித்தார்.
அதோடு, மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தில் பயன்பெறும் குடும்பத் தலைவிகளுக்கான நிபந்தனைகளையும் அறிவித்தார். செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். ரேஷன் கடைகள் மூலம் 1 கோடி விண்ணப்பங்களை விநியோகித்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
உடனே வேலையை ஆரம்பித்த சென்னை மாநகராட்சி: மேலும், சமுதாயத்தில் உள்ள விளிம்பு நிலை மக்கள் இந்த திட்டத்தில் பயனடைவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும். விளிம்பு நிலை மக்களிடம் ஆதார், ரேஷன் கார்டு இல்லாவிட்டாலும் அவற்றை பெற வழி செய்து, உரிமைத்தொகை கிடைத்திட உதவ வேண்டும். அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி நிர்வாகம், உடனடியாக இன்று உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான முன்னேற்பாட்டு பணிகளை தொடங்கியது. இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த், சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா, மற்றும் மாநகராட்சி உயரதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
விண்ணப்ப முகாம்: உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகள் விவரங்களை தயார் செய்வது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 1000 உரிமைத்தொகை பெறும் பயனாளிகளை தேர்வு செய்ய பள்ளிகள், சமுதாய நலக் கூடம், அரசு அலுவலகங்கள், இரவு காப்பகங்கள் ஆகிய இடங்கள் முகாம்கள் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன. முகாம்கள் நடைபெறும் இடங்களில் குடிநீர், கழிவறை, மின்சார வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
பயனாளிகள் விண்ணப்பங்களைப் பெற ஜூலை 3வது வாரம் முதல் சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பணிகளை விரைந்து செய்வதற்காக தன்னார்வலர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்றும், மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் பயோமெட்ரிக் மூலம் பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்படும் எனவும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு முகாமுக்கும்: இந்த ஆலோசனைக் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களின்படி, ஒவ்வொரு முகாமுக்கும் ஒரு பொறுப்பு அலுவலர், உதவிப் பொறியாளர், வரி மதிப்பீட்டாளர், உரிமம் ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார அலுவலர், தூய்மைப் பணி மேற்பார்வையாளர் மற்றும் தூய்மைப் பணி ஆய்வாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பணிகளை மேற்பார்வையிட மண்டல அலுவலர்கள் தலைமையில், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், உதவி சுகாதார அலுவலர்கள், உதவி கணக்கு அலுவலர்கள், உதவி மின் பொறியாளர்கள் நிலையில் ஒரு அதிகாரியும், அந்தப் பகுதியை சார்ந்த ஒரு உதவி அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பயிற்சிகள்: இந்தப் பணிகளை கண்காணிக்க தலைமையகத்திலிருந்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் ஆகியோர் கண்காணிப்பு அலுவலர்களாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்காக TNeGA மூலமாக சென்னை மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர்களுக்கு ஜூலை 6ஆம் தேதி பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் மூலமாக பயோமெட்ரிக் மூலம் பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்படும்.
இதற்கான பயோ மெட்ரிக் கருவிகளை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக e-District மேலாளர்களுடன் சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்து மண்டல அலுவலர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications