கதறிய கலாஷேத்ரா மாணவிகள்.. பாலியல் வழக்கில் கைதான பேரா.ஹரி பத்மன் ஜாமீன் மனு தள்ளுபடி! காரணம் என்ன?
சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் ருக்மணி அருண்டேல் கல்லூரி அமைந்து உள்ளது. அதில் பயின்றபோது ஆசிரியர்களால் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முன்னாள் மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து கலாஷேத்ரா வளாகத்தில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு தரப்பினர் கலாஷேத்ரா மாணவிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில் நடன துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ஏப்ரல் 3 ஆம் தேதி அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஹரி பத்மன் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், கண்டிப்பான ஆசிரியரான தன் மீது, பழைய மாணவர்களும், தற்போது படிக்கும் மாணவர்களும் மிகுந்த மதிப்பு வைத்துள்ளதாகவும், தனது வளர்ச்சியை பிடிக்காத சிலர், மாணவிகளைத் தூண்டி விட்டு பொய் புகார் கொடுத்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணை வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். "விசாரணை இன்னும் முடிவடையவில்லை. இன்னும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. எனவே அது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தற்போதைய நிலையில் ஜாமின் வழங்கப்பட்டால் சாட்சிகளை கலைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்த மாநில மகளிர் ஆணையம், மாணவிகள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புகார்களை தெரிவிக்கும் மாணவிகள் மிரட்டப்பட்டு இருப்பதாகவும், பலர் புகார் அளிக்க பயப்படுவதாகவும், புகாருக்கு முகாந்திரம் உள்ளதால் அதன் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு மேல் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அரசிடம் அறிக்கை அளித்து இருக்கிறது அதன் அடிப்படையிலும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது." என்று தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர், "பழிவாங்கும் நோக்கில் தங்களுக்கு எதிராக இந்த புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. எந்தவிதமான சட்ட வாய்ப்புகளையும் வழங்காமல் கைது நடவடிக்கைகளை காவல்துறை செய்துள்ளது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம். நீதிமன்றம் விதிக்கின்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளோம். எனவே ஜாமீன் வழங்க வேண்டும்." என வாதிட்டார்.
இதே போல் புகார் அளித்த மாணவிகள் மற்றும் மாநில மகளிர் ஆணையம் தரப்பின் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்று கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications