எச்சரிக்கை தேவை! சென்னையில் இன்று மட்டும் 28 பேருக்கு கொரோனா.. 500ஐ தாண்டியது பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் மிக அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 28 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
சென்னையில் கொரோனா பாதிப்பு தினசரி வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய நகரம் என்பது மட்டுமல்லாமல் எல்லா மாவட்ட மக்களும் கணிசமாக வசிக்கும் பகுதியாக சென்னை விளங்குகிறது. மக்கள் அடர்த்தியும் மிக மிக அதிகம்.
சென்னையில் மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள பகுதிகளில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இன்று 28 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் எந்தெந்ந மண்டலம் என்பதை சென்னை மாநகராட்சி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக சென்னையில் 523 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.

திருவிக நகர்
இன்று காலை 11 மணி நிலவரப்படி, (இன்று மாலை நிலவரம் இன்னும் வெளியாகவில்லை) சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 94 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 38 பேர் குணம் அடைந்துள்ளனர். . அதற்கு அடுத்தபடியாக திருவிக நகர் மண்டலத்தில் 52 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். 26 பேர் குணம் அடைந்துவிட்டனர். தண்டையார் பேட்டை மண்டலத்தில் 48 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தனர். 15 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

கோடம்பாக்கம் எப்படி
தேனாம்பேட்டை மண்டலத்தில் 41 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிக்சை பெற்று வருகிறார்கள். 13 பேர் குணம் அடைந்துவிட்டனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் 35 பேர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 18 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். வளசரவாக்கம் மண்டலத்தில் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 5 பேர் குணம் ஆகியுள்ளனர். ஆலந்தூரில் 2 பேர் குணமாகிவிட்ட நிலையில் 7 பேர் மருத்துவனையில் உள்ளனர்.

அடையாறு பாதிப்பு
அடையாறில் 4 பேர் குணமாகி உள்ள நிலையில் 6 பேர் மருத்துவமனையில் உள்ளனர், திருவெற்றியூர் மண்டலத்தில் 4 பேர் குணமாகிவிட்ட நிலையில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாதவரம் மண்டலத்தில் 3 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3பேரும் குணம் அடைந்துவிட்டனர். அங்கு யாருக்கும் இப்போது கொரோனா இல்லை.

சோழிங்கநல்லூர் சூப்பர்
பெருங்குடி மண்டலத்தில் 6 பேர் குணமான நிலையில் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சோழிங்க நல்லூர் மண்டலத்தில் 2பேர் குணமாகிவிட்ட நிலையில் அங்கு யாருக்கும் இப்போது கொரோனா இல்லை. மணலியில் ஒருவரும், அம்பத்தூரில் 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒட்டுமொத்தமாக இன்று காலை 11 மணி நிலவரப்படி சென்னையில் 151 பேர் குணம் அடைந்த நிலையில், 332 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

350 பேர் சிகிச்சை
இநநிலையில் இன்று மாலை நிலவரப்படி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் குணம் அடைந்துவிட்டனர். இதன் மூலம் சென்னையில் குணமானவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் சென்னையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 351 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 28 பேரில் 9 பேர் 50 வயதை கடந்தவர்கள் ஆவர் மீதமுள்ள 19 பேர் 50க்கு உட்பட்டவர்கள் ஆவார். இளம் வயதினர் அதிக அளவு தொடர்புகள் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications