சென்னை மக்களே! டிராபிக் விதிமீறல் என அபராதம் மெசேஜ் வருதா? உஷாரா இருங்க!
சென்னை: போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக, அபராதம் குறித்து மெசேஜ் வந்தலோ, சைபர் ஹெல்ப் டெஸ்க்கிலிருந்து கூப்பிடுகிறோம் என்று போன் கால் வந்தாலோ உஷாராக இருக்க வேண்டும் என்று சென்னை சைபர் கிரைம் போலீசார் எச்சரித்திருக்கின்றனர்.
நீங்கள் பைக் அல்லது கார் உரிமையாளர் எனில், உங்களுக்கு "பரிவாஹன் இ-சலான்" என்கிற பெயரில் மெசேஜ் வரும். பெரும்பாலும் இது வாட்ஸ்அப் வழியாகத்தான் வரும். நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறிவிட்டதாகவும், அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அந்த மெசேஜில் தெரிவிக்கப்பட்டிருக்கும். வழக்கமாக போக்குவரத்து காவல்துறை அனுப்பும் மெசேஜ்களில் கூகுள் ப்ளே ஸ்டோரில் அங்கீகரிக்கப்பட்ட 'நெக்ஸ்ட் ஜெனரேஷன் இபரிவாஹன்' (mParivahan) ஆப் லிங்க் இருக்கும்.

இந்த லிங்கை நீங்கள் கிளிக் செய்தால், உடனடியாக பிளே ஸ்டோருக்கு போகும். பின்னர் இந்த ஆப்-ஐ இன்ஸ்டால் செய்து, அபராத தொகையை கட்டலாம்.
ஆனால், போலியான மெசேஜில், APK அப்ளிகேஷனின் லிங்க் இருக்கும். இது கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்காது. க்ரோம் மூலம் இன்ஸ்டால் செய்ய வேண்டி இருக்கும். அதை நீங்கள் உண்மை என நினைத்து இன்ஸ்டால் செய்தால் உங்கள் மொபைலுக்கு வரும் எஸ்.எம்.எஸ்., தொடர்பு எண்கள் மற்றும் வங்கி விவரங்களை அணுக அனுமதி கேட்கும்.
எல்லாவற்றிற்கும் ஓகே கொடுத்தால், ஓ.டி.பி.களைக் அனுப்பி, மோசடியான பணப் பரிமாற்றங்களைச் செய்து வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்துவிடுவார்கள். வங்கி கணக்கில் பணம் காலியான பின்னர்தான், தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிந்துக்கொள்வார்கள்.
எனவே போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை, அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் அல்லது கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் அரசு செயலி மூலம் மட்டுமே கட்ட வேண்டும் சரிபார்க்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. APK அப்ளிகேஷன்களை ஒருபோதும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இரண்டாவது மோசடி "சைபர் ஹெல்ப் டெஸ்க் அழைப்பு" மோசடி ஆகும். இதில், மோசடிக்காரர்கள் சைபர் கிரைம் உதவி மைய முகவர்களாகவோ அல்லது சட்ட வல்லுநர்களாகவோ நடித்து, ஏற்கனவே பணம் இழந்தவர்களை அணுகுகிறார்கள். வாட்ஸ்அப், டெலிகிராம், அழைப்புகள் அல்லது மின்னஞ்சல்கள் மூலம் இவர்களைத் தொடர்பு கொள்கிறார்கள். புகார்களைப் பதிவு செய்வதற்கோ அல்லது இழந்த நிதியை மீட்டெடுப்பதற்கோ கூடுதல் பணம் கோருகிறார்கள்.
ஆனால் பணத்தை இழந்தவர்கள், 1930 என்ற உதவி எண் மூலமாகவோ அல்லது cybercrime.gov.in என்ற வலைத்தளம் மூலமாகவோ புகார்களை இலவசமாக பதிவு செய்யலாம். எனவே, தேவையற்ற தொடர்புகளையோ அல்லது போலியான வலைத்தளங்களையோ நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications