காரை நிறுத்தாதே.. பின்னாடி போ.. இக்கட்டான நேரத்தில் ஸ்மார்ட்டாக யோசித்த பெண்! ஈசிஆரில் என்ன நடந்தது?
சென்னை: சென்னை ஈசிஆர் பகுதியில் காரில் சென்ற பெண்கள் இன்னொரு காரில் சென்ற ஆண்கள் மூலம் துரத்தப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது. பிரபல ஊடகங்கள் இவற்றை வெளியிட்டு உள்ளன. ஆனால் இந்த விவகாரத்தில் உண்மையில் யார் மீது தவறு என்பது தெரியவில்லை. அதிலும் இந்த வீடியோ பழைய சம்பவம் ஆகும்.
அந்த ஆண்கள் உள்ள கார் பெண்கள் இருந்த காரை துரத்தி சென்றதாக ஒரு சாரர் புகார் வைக்கின்றனர். இன்னொரு பக்கம் திமுக தரப்பினர், சமூக வலைத்தளங்களில் இதற்கு வேறு மாதிரி பதிலடி கொடுக்கிறார்கள். கடந்த 25ம் தேதி இரவு இந்த சம்பவம் தாம்பரம் ஆணையரக கானத்தூர் காவல் நிலைய எல்லையில் நடந்துள்ளது.

பெண்கள் பயணித்த கார் மற்றொரு காருடன் மோதியதால் அந்த சொகுசு காரில் இருந்தவர்கள் இந்த காரை துரத்தி நியாயம் கேட்டுள்ளனர். அந்த சமயத்தில் இரு தரப்பினரும் காம்பரமைஸ் ஆகியுள்ளனர். அடுத்த நாள் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சி எஸ் ஆர் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில் பள்ளிக்கரணை காவல் துறையினர் இது தொடர்பாக விசாரித்து வருகிறார், என்று திமுக ஆதரவு நெட்டிசன்கள் கூறி உள்ளனர்.
கவனம்:
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது தாண்டி.. அந்த இக்கட்டான நேரத்தில் அவ்வளவு களேபரத்திலும் காரில் இருந்த பெண் கொடுக்கும் டிப்ஸ் அருமையாக இருந்தது. அவரின் துரிதமான செயல்பாடு, சமயோஜித செயல்பாடு பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. காரில் வீடியோ எடுத்தபடி டிப்ஸ் தந்த பெண்..ஏ வேண்டாம் வேண்டாம்.. கதவை திறக்காதே, பின்னாடியே ரிவர்ஸ் எடுத்து போ, என சொல்லி சரியாக அங்கிருந்து செல்ல திட்டங்களை வகுத்தார்.
பொதுவாக இது போன்ற நேரங்களில் பலருக்கும் பதற்றம் ஏற்படும். ஆனால் அந்த பெண் பதற்றம் அடையவில்லை. மாறாக வீடியோவை பதற்றப்படாமல் பதிவு செய்துள்ளார்.

மேலும் சரியாக யோசித்து மாமாவுக்கு போன் பண்ணு என்றும் அதே நேரம் அறிவுரையும் கூறுகிறார். பொதுவாக இதுபோன்ற சூழ்நிலையில் பலருக்கு கையும் காலும் ஓடாமல் இருக்கும், ஆனால் இவர் அனைத்து விஷயத்தையும் பக்காவாக சொல்கிறார். அதோடு கதவை திறக்காதே.. பின்னாலே செல்.. பிரேக் பிடிக்காதே என்று முறையாக ஆலோசனைகளை வழங்கி உள்ளார். அவர்களின் இந்த வீடியோ இணையத்தில் தீவிரமாக பரவி வருகிறது.
எடப்பாடி கண்டனம்:
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ள கண்டனத்தில், சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது.
அவர்களிடம் இருந்து தப்பித்த பெண்களை வீடு வரை துரத்தி வந்த கயவர்கள், வீட்டில் இருந்த உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் கூடியதால் அங்கிருந்து சென்றதாகவும், இது குறித்து புகாரளித்தால் "இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச்சொன்னது" என்று காவல்துறையினர் கேட்டதாகவும் பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறுகின்றனர்.
பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை கூட ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பறிக்கப்பட்டிருக்கிறதா?
பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி உள்ளிட்ட ஆளுங்கட்சி அடையாளம் என்பது லைசன்சா?
குற்றம் செய்பவர்கள் திமுகவினர் என்றால் காவல்துறை ஆமை வேகத்தில், காலம் தாழ்ந்து தான் செயல்படுமா?
#யார்_அந்த_SIR என்ற நீதிக்கான கேள்விக்கு எரிச்சல் அடைந்த திரு. ஸ்டாலின், இந்த SIR-கள் பற்றி என்ன சொல்லப் போகிறார்?
மாநிலத்தின் பிரதான சாலையான ECR-ல், பெண்களை இப்படி கொடூரமாக வழிமறித்து தைரியமாக தாக்க முயலும் அளவிற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை அடியோடு கெடுத்துள்ள இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இந்த வழக்கில், நேர்மையாக FIR பதிந்து, பாதிக்கப்பட்டோர் விவரம் லீக் ஆகாததை உறுதிசெய்து, அரசியல் தலையீடு இல்லாமல் இக்குற்றத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன், என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications