ஸ்தம்பித்த சென்னை ஈசிஆர்.. ரத்த வாந்தி எடுத்து இறந்த மாணவர்.. கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமா?
சென்னை: சென்னை கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபல கல்லூரியின் மாணவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்ததற்கு கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னை கானத்தூரில் கிழக்கு கடற்சாலையை ஒட்டி தனியார் கடல்சார் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஏரளமான மாணவர்கள் படிப்புகளை விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். கடல்வழி தொடர்பு மற்றும் கடல்வழிப் பணி ஆகியவற்றை விரும்பும் மாணவர்கள் இந்த கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார்கள்.

கானத்தூரில் உள்ளள கல்லூரியின் விடுதியில் தங்கி ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். அப்படித்தான் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22-வயதான பிரசாந்த் என்ற கல்லூரி மாணவன் இந்த நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் பிஇ நான்காம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். கல்லூரி தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்த பிரசாந்த் இன்று அதிகாலை இரத்த வாந்தி எடுத்திருக்கிறார்.
இதையடுத்து சக மாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவில்லையாம். கானத்தூரில் இருந்து தாமாகவே கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்தவமனைக்கு சென்றுள்ளாராம். ஆனால் துரதிஷ்டவசமாக மாணவன் பிரசாந்த் அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதனிடையே மாணவன் பிரசாந்த்தின் இறப்பை தாங்க முடியாத சக கல்லூரி மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று கூறி, நியாயம் கேட்டு போராட்டத்தில் குதித்தனர்.
இன்று அதிகாலை டூட்டி ஆபிசர் புருஷோத்தமன் என்பவர், உடல் நிலை பாதிக்கப்பட்ட மாணவர் பிரசாந்த்துக்கு ஓய்வு கொடுக்காமல் கடுமையான உடற்பயிற்சி கொடுத்ததாகவும் அதனால் தான் மாணவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்ததாகவும் குற்றம்சாட்டினர். மேலும் மாணவர் ரத்த வாந்தி எடுத்தது தொடர்பாக உடடினயாக கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் கூறியும், அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் காலம் தாழ்த்தியதாகவும், கேட்பாஸ் வழங்க தாமதித்ததே உயிரிழப்புக்கு காரணம் என கல்லூரி மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதனிடையே, எங்களுக்கு நீதி வேண்டும், எங்களுக்கு நீதி வேண்டும் என்ற கோஷங்களுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் கல்லூரியின் எதிரே மாணவர்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த கிழக்கு கடற்கரை சாலை மொத்தமாக ஸ்தம்பித்து போனது.
போலீசார் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். இனிடையே 3 நாட்கள் விடுமுறை அறிவித்த கல்லூரி நிர்வாகம், குறிப்பிட்ட டூட்டி ஆபிசர் புருஷோத்தமனை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மாணவர் இறந்து போனதாகவே மாணவர்கள் குற்றம்சாட்டும் நிலையில், இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் மாணவர் பிரசாந்த் ரத்த வாந்தி எடுத்து இறந்தது எப்படி என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும் என்பதால் இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications