சூழ்ந்த வெள்ளம்.. உடனே ஓடி வந்த அமைச்சர் சேகர் பாபு.. ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள் பத்திரமாக மீட்பு
சென்னை: சென்னையில் காப்பகம் ஒன்றில் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், அரைமணி நேரத்தில் அமைச்சர் சேகர்பாபு அந்த குழந்தைகளை மீட்டு திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளார் . இதற்கு காப்பகம் தரப்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை நகரில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சென்னையின் பல்வேறு இடங்களில் நேரில் ஆய்வு செய்து மக்களுக்கு உரிய உதவிகளை செய்து வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி இன்று வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார். கடந்த ஆட்சிக் காலத்தைப் போல அல்லாமல் தற்போது முதல்வர் நேரடியாக உடனடியாக களத்துக்கு வந்திருப்பதால் மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்று அமைச்சர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

கொளத்தூரிலுள்ள காப்பகம்
அவர்கள் கூறுவது உண்மைதான் என்பது போன்ற ஒரு சம்பவம் முதல்வர் ஸ்டாலினின் சட்டசபை தொகுதியான சென்னை கொளத்தூர் பகுதியில் நடைபெற்றுள்ளது. இங்கே உள்ள ஆதரவற்றோர் காப்பகம் ஒன்றில் வெள்ளநீர் புகுந்தது. அங்கே குழந்தைகள் பலரும் இருப்பதால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சேகர் பாபு வருகை
6ம் தேதி இரவு முதல் காப்பகத்துக்கு உள்ளே தண்ணீர் வர ஆரம்பித்துள்ளது. குழந்தைகளின் சான்றிதழ்கள், புத்தகங்கள் போன்றவற்றை பத்திரமான பகுதியில் வைத்துவிட்டு காப்பக நிர்வாகிகளும் குழந்தைகளும் தண்ணீருக்குள் உட்கார்ந்துகொண்டு கஷ்டப்பட்டனர். இந்த தகவல் அமைச்சர் சேகர்பாபு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருமண மண்டபம்
அடுத்த அரை மணி நேரத்தில் அவர் நேரடியாக அந்த காப்பகம் பகுதிக்கு சென்றார். உடனடியாக குழந்தைகள் அனைவரையும் பத்திரமாக மீட்டு திருமண மண்டபத்தில் தங்க வைப்பதற்கு ஏற்பாடுகளை செய்தார். அதன்படியே , குழந்தைகள் மீட்கப்பட்டு தற்போது திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவைப்படும் உணவு போன்றவை வழங்கப்பட்டு உள்ளன.

ஆடைகள், போர்வைகள்
6 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட சுமார் 30 பேர் இந்த காப்பகத்தில் இருந்தனர். அனைவரும் இப்போது பத்திரமாக உள்ளனர். அமைச்சர் சேகர்பாபுக்கு காப்பக நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர். குழந்தைகள் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள திருமண மண்டப உரிமையாளரிடம் அமைச்சர் பேசி இதற்கான ஏற்பாடு செய்து கொடுத்ததோடு, ஆடைகள், போர்வைகள் போன்ற அடிப்படை வசதிகளையும் செய்து கொண்டிருப்பதாக காப்பக நிர்வாகிகள் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications