மனைவியுடன் பூரித்த ஸ்டாலின்.. சென்னை ஏர் ஷோவால் விமானப்படையினரை ஹீரோ என பாராட்டிய முதல்வர்!
சென்னை: சென்னை மெரினாவில் இன்று விமான வான் சாகச நிகழ்ச்சி நடந்தது. இதனை முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சேர்ந்து நேரில் கண்டு ரசித்து பூரித்துப்போன நிலையில் இந்திய விமானப்படையின் ஹீரோக்கள், சூப்பர் ஸ்டார்களால் இன்று நிகழ்த்தப்பட்ட கண்கவர் சாகசத்தை சென்னை ரசித்துள்ளது என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நம் நாட்டின் பாதுகாப்பில் ராணுவம், விமானப்படை, கப்பற்படை உள்ளிட்ட முப்படைகளும் முக்கிய பங்காற்றி வருகிறது. இதில் விமானப்படை சார்பில் அடிக்கடி சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இந்திய விமானப்படை தொடங்கி 92 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

தற்போது நமது விமானப்படை 93வது ஆண்டில் அடியெடுத்து வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் சென்னை மெரினாவில் இன்று பிரமாண்டமாக இந்திய விமானப்படை சார்பில் விமான வான் சாகச நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு விமான சாகச நிகழ்ச்சி தொடங்கியது.
ரஃபேல் போர் விமானங்கள், விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் என்று 72 வானூர்திகள் சாகசத்தில் மின்னல் வேகத்தில் பறந்து சாகசம் செய்தன. வானில் வட்டமடித்தும் வண்ண புகையை கக்கியும் பார்வையாளர்களை வியக்க வைத்தன.
இந்த நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் ரசித்தார். அதேபோல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமை ஏர் மார்ஷல் ஏபி சிங், அமைச்சர்கள் துரை முருகன், பொன்முடி, எவ வேலு உள்பட பல லட்சம் பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் இந்திய விமானப்படைக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ‛‛நம் விமானப்படையின் ஹீரோக்கள் மற்றும் சூப்பர்ஸ்டார்கள் வானில் நிகழ்த்திய கண்கவர் நிகழ்ச்சியை சென்னை கண்டு ரசித்துள்ளது. நன்றி இந்திய விமானப்படை'' என தெரிவித்துள்ளார்.
இந்த விமான சாகச நிகழ்ச்சியை 15 லட்சம் பேர் வரை கண்டு ரசித்துள்ளனர். மெரினாவில் மட்டும் 10 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளதாக கூறப்படுகிறது. இது புதிய சாதனையாகும். உலகிலேயே அதிக மக்கள் கண்டுகளித்த விமான சாகச நிகழ்ச்சி என்ற சாதனையை சென்னை விமான சாகச நிகழ்ச்சி பெற்றுள்ளதோடு, லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
அதேவேளையில் சென்னை விமான சாகசத்தை பார்க்க லட்சக்கணக்கில் மக்கள் திரண்டதால் மொத்த சென்னையும் முடங்கியது. சென்னை கடற்கரையை நோக்கி வரும் அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நகர முடியாமல் ஊர்ந்து சென்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications