அதிமுக பொதுக் குழுவுக்கு தடை இல்லை.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு.. ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு
சென்னை: அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஓபிஎஸ், பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
Recommended Video
ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்களை நிராகரித்ததுடன், கட்சியின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்தும், அடுத்த பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடத்தப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஓபிஎஸ் வழக்கு
இந்நிலையில், ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவர் தனது மனுவில், கட்சியில் எந்த விவாதமும் நடத்தாமல், ஒற்றைத் தலைமை கொண்டு வரும் வகையில் ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற இருந்ததால் அதை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தீர்மானம்
உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை மீறி, ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்களை நிராகரித்ததுடன், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அனுமதியில்லாமல் தமிழ்மகன் உசேனை நிரந்தர தலைவராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல்
அதேபோல ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு நடத்தப்படும் என அவைத்தலைவர் அறிவித்தது கட்சி விதிகளுக்கு முரணானது எனவும், கட்சி விதிகளின்படி பொதுக்குழு, செயற்குழு உள்ளிட்ட எந்த கூட்டங்களை கூட்டுவதாக இருந்தாலும் அதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

அதிகாரமில்லை
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தவிர வேறு எவருக்கும் பொதுக்குழுவை கூட்ட அதிகாரமில்லை எனவும், இரு பதவிகளின் அதிகாரத்தை அவைத்தலைவரோ, தலைமைக் கழக நிர்வாகிகளோ பறித்துக் கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார். ஒற்றைத் தலைமை கொண்டு வரும் வகையில் ஜூலை 11ல் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வர முயற்சிப்பதாகவும், அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.

இரு பதவிகள்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்படாததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தொடர்ந்து செயல்பட முடியாது எனக் கூறி, இரு பதவிகளின் அதிகாரத்தை தலைமைக் கழக நிர்வாகிகள் பறித்துக் கொள்ள முடியாது எனவும் ஜூன் 23ல் இரு பதவிகளுக்கும் ஒப்புதல் கோரி எந்த தீர்மானங்களும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஜூலை 11 இல் பொதுக் குழு
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் ஜூலை 11ல் கூட்டப்படும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். இந்த மனுவில் அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்து இன்று இந்த வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பமே மேலோங்கி இருக்கும் எனவும், பொதுக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள 2,665 பேரில் 2,100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட விருப்பம் தெரிவித்துள்ளதால் பொதுக்குழுவை கூட்டலாம் என அனுமதியளித்து உத்தரவிட்டார்.

உள்விவகாரங்கள்
அரசியல் கட்சிகளின் உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், கட்சி விதிகளின்படியும் பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் எனவும், விதிமீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உத்தரவிட்டு, பன்னீர்செல்வம் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications