அரசு கேபிள் டிவி கழகம் ரூ.570 கோடி ஜிஎஸ்டி செலுத்த நோட்டீஸ்.. இடைக்கால தடை விதித்தது சென்னை ஐகோர்ட்
சென்னை: சரக்கு மற்றும் சேவை வரி 285 கோடி ரூபாயை அபராதத்துடன் சேர்த்து 570 கோடி ரூபாய் செலுத்தும்படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்திற்கு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செலுத்தாத ஜிஎஸ்டி வரி, 285 கோடியே 4 லட்சத்து 79 ஆயிரத்து 342 ரூபாயை அபராதத்துடன் சேர்த்து 570 கோடி ரூபாய் செலுத்தும் படி, ஜிஎஸ்டி ஆணையரகம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்த நோட்டீசை எதிர்த்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், மல்டி சிஸ்டம் ஆப்ரேட்டர் என்ற முறையில் அரசு கேபிள் டிவி கழகம், தொலைக்காட்சி சேனல்களின் சிக்னல்களை உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு வழங்கும் என்றும் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அந்த சிக்னல்களை நுகர்வோர்களுக்கு வழங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர்களிடமிருந்து உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வசூலிக்கும் தொகையில், அரசு கேபிள் டிவி கழகம், சம வருமானத்தை பெறுகிறது என்றும் அதற்கான ஜிஎஸ்டி வரி, எந்த பாக்கியும் இல்லாமல் செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், அவர்களுக்கான ஜிஎஸ்டி வரியை செலுத்த வேண்டும். அதற்கு அரசு கேபிள் டிவி கழகம் பொறுப்பாகாது என்பதால், 285 கோடி ரூபாய் வரியை அபராதத்துடன் சேர்த்து 570 கோடி ரூபாய் செலுத்தும் படி ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வருமானத்தை, அரசு கேபிள் டிவி கழகத்தின் வருமானமாக கருத முடியாது என்றும் ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த நோட்டீசுக்கு உரிய பதிலளித்தும் அதை பரிசீலிக்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, 285 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியை அபராதத்துடன் சேர்த்து 570 கோடி ரூபாய் செலுத்தும் படி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகத்திற்கு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications