கொரோனா கிருமி நாசினி, மாஸ்க் கொள்முதலில் பெரும் ஊழலா?.. நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: ஓமலூர் பஞ்சாயத்தில் கொரோனா நிவாரண நிதியில் கிருமிநாசினி, முக கவசம், கையுறைகள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஊரக வளர்ச்சி துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலர் சிவஞானவேல் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

அதிக விலைக்கு கொள்முதல்
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா முதலாவது அலை பரவிய நேரத்தில், பஞ்சாயத்து ஒன்றியம் சார்பில், கொரோனா நிவாரண நிதியில் இருந்து, பொதுமக்களுக்கு வழங்குவதற்காகவும், பொது இடங்களில் கிருமி நாசினி தெளிப்பதற்காகவும், கிருமிநாசினி, முக கவசம் மற்றும் கையுறைகள் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.

பெரிய ஊழல்
லிட்டருக்கு 76 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்ட கிருமினாசினியை, 280 ரூபாய்க்கு 5,000 லிட்டர் வாங்கியுள்ளதாகவும், 130 ரூபாய்க்கு விற்கப்பட்ட முககவசங்களை 220 ரூபாய்க்கும், 13 ரூபாய்க்கு விற்கப்பட்ட கையுறைகளை 180 ரூபாய்க்கும் வாங்கியுள்ளனர். மொத்தமாக, 11 லட்சத்து 55 ஆயிரத்து 200 ரூபாய்க்கு இப்பொருட்களை வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது.

விசாரணை வேண்டும்
இதுகுறித்து மன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பிய போது, தனது ஆட்சேபனைகளை கருத்தில் கொள்ளாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் மற்றும் சேலம் ஆட்சியருக்கு புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கொரோனா நிவாரண நிதியில் நடந்த இந்த ஊழல் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்.

தலைமைச் செயலாளருக்கு உத்தரவு
இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது, அப்போது மனுதாரர் 25 ஆயிரம் ரூபாய் டிபாசிட் செய்யும்பட்சத்தில் இந்த புகார் தொடர்பாக தணிக்கை செய்ய ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு உத்தரவிட்டது. மேலும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் டிபாசிட் தொகையை மனுதாரருக்கு திருப்பி அளிக்கலாம் எனவும், முறைகேடுகள் நடந்துள்ளதற்கு முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், அதுசம்பந்தமாக தலைமைச் செயலாளருக்கு அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications