தியேட்டர்களில் அதிக விலைக்கு விற்கப்படும் உணவுப்பொருட்கள்.. அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் குடிநீர் வசதிகள் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா? என்பது குறித்து அடிக்கடி ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள எஸ் 2 ஸ்பெக்ட்ரம் மாலில் உள்ள திரையரங்கில், வாட்டர் பாட்டில்கள் குளிர்பானங்கள், உணவு பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட விற்பனையை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பெரம்பூரை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சட்டப்படி தவறானது
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது சட்டப்படி தவறானது என்றும் இதன் மூலம் பல லட்ச ரூபாய் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்படுவதாகவும், இது தொடர்பாக முறையாக விசாரணை செய்து உரிய நபர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடர உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கோரியுள்ளார்.

அபராதம் வசூலிப்பு
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பது தொடர்பான புகார் குறித்து சோதனை செய்வதாகவும், அதில் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2021 ஜூலை மாதம் வரை 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது .

தமிழக அரசுக்கு உத்தரவு
இதையடுத்து நீதிபதி, 'தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் குடிநீர் வசதிகள் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் உள்ளனவா என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது தொடர்பாக புகார் வந்தால் அதன் மீது உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார். தொடர்ந்து இந்த வழக்கை முடித்து வைத்தார்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக நீண்ட காலமாக மூடப்பட்டு இருந்த தியேட்டர்கள் அண்மையில்தான் திறக்கப்பட்டன. பல்வேறு தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் ஏற்கனவே அதிகமாக இருக்க, அங்கு விற்கப்படும் உணவு பொருட்களின் விலை மிக அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை விலை குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications