நாளை ரிலீஸாகிறது கங்குவா திரைப்படம்! தடையை நீக்கிய ஹைகோர்ட்! சூர்யா ரசிகர்கள் ஹேப்பி
சென்னை: Fuel technologies என்ற நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ஒரு கோடியே அறுபது லட்சம் ரூபாயை தலைமை பதிவாளர் பெயரில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் டெபாசிட் செய்துவிட்டதால் நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட மூன்று திரைப்படங்களின் இந்தி டப்பிங் உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் இருந்து ஆறு கோடியே அறுபது லட்சம் ரூபாய்க்கு சென்னையைச் சேர்ந்த fuel technologies international private limited என்ற நிறுவனம் வாங்கியிருந்தது.

இரண்டு படங்கள் தயாரிக்கபடாததால் ஐந்து கோடி ரூபாயை fuel technologies நிறுவனத்துக்கு திருப்பி செலுத்திய நிலையில், மீதம் உள்ள ஒரு கோடியே அறுபது லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை.
இந்த தொகையை வட்டியுடன் சேர்த்து 11 கோடி ரூபாயை திருப்பி வழங்காமல் கங்குவா படத்தை வெளியிட தடை விதிக்க கோரி fuel technologies நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இத்தனை ஆண்டுகள் காத்திருந்த நிலையில் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனையடுத்து, Fuel technologies நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய அசல் தொகையான ஒரு கோடியே அறுபது லட்சம் ரூபாயை சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, பணத்தை டெபாசிட் செய்யாமல் படத்தை வெளியிடக்கூடாது எனவும் நேற்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ரூ 1.60 கோடியை செலுத்திவிட்டது. மற்றொரு வழக்கில் ரூ 6.41 கோடி செலுத்திய நிலையில் மீதமுள்ள 3.75 கோடி ரூபாயை டிச.11 க்குள் செலுத்துவதாக ஸ்டுடியோ கிரீன் வாக்குறுதி அளித்துள்ளது. இதையடுத்து நாளை கங்குவா படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications