Rolls Royce car: நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதியின் விமர்சன கருத்துகள் நீக்கம்- ஹைகோர்ட் தீர்ப்பு
சென்னை: நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் கூறிய விமர்சன கருத்துகளை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் காரை இறக்குமதி செய்திருந்தார். அந்த காருக்கு நுழைவு வரி ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது தனி நீதிபதி சுப்பிரமணியம், "சினிமா நடிகர்கள் உரிய வரியை செலுத்த வேண்டும். வரி வருமானம் என்பது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்புதானே தவிர தானாக வழங்கும் நன்கொடை அல்ல.
இத்தனை வருஷம் கழித்து.. பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக பெண் நீதிபதி நியமனம்!

மக்கள் வரி
மக்கள் செலுத்தக் கூடிய வரிகள் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் நடிகர்கள் நாடாளும் அளவுக்கு வளர்ந்துவிட்ட நிலையில் உண்மையான ஹீரோக்களாக அவர்கள் இருக்க வேண்டும். வரி செலுத்த மறுத்து தொடரப்பட்ட இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

நிஜ வாழ்க்கை
லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள பிரபல நடிகர்கள் திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் உண்மையான ஹீரோக்களாகத் திகழ வேண்டும். ரீல் ஹீரோக்களாக அவர்கள் இருக்கக் கூடாது. சமூக நீதிக்குப் பாடுபடுவதாக தங்களை பிரதிபலித்து கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஒரு தேச துரோகம் என கடுமையாக விமர்சித்தார். அத்துடன் ரூ 1 லட்சம் அபராதம் விதித்து அந்த தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இடைக்காலத் தடை
இந்த நிலையில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்தும் தன்னை பற்றிய விமர்சனங்களை நீக்கக் கோரியும் அபராதத்தை எதிர்த்தும் நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில் அந்த மேல்முறையீட்டு மனு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா நிவாரண நிதிக்கு தான் ஏற்கெனவே நிவாரணம் கொடுத்தாகிவிட்டதாக விஜய் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகைக்கு இடைக்கால தடை விதித்தது.

விஜய் வழக்கில் இன்று தீர்ப்பு
ஆனால் அதே நேரத்தில் விஜய் செலுத்த வேண்டிய ரோல்ஸ்ராய்ஸ் காருக்கான வரியை செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. முழு வரியை செலுத்த தயார் என விஜய் தரப்பு கூறியிருந்த நிலையில் தான் வாங்கிய காருக்கான வரியை முழுமையாக செலுத்திவிட்டார். இந்த நிலையில் தனி நீதிபதியின் விமர்சனத்தை நீக்கக் கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.

விஜய் தரப்பு வாதம்
தீர்ப்பை நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது சபீக் அமர்வு வழங்கியது. இதில் விஜய் தரப்பு தனது வாதத்தில், "ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நிலுவை வரித்தொகையான ரூ. 32 லட்சத்து 30 ஆயிரத்தை ரூபாய் ஆகஸ்ட் 7ஆம் தேதி செலுத்திவிட்டோம். வழக்கு ஆவணங்களில் தொழிலை சொல்ல வேண்டிய அவசியமில்லை. நுழைவு வரி செலுத்துவதில்லை என்றும், வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதும் தேவையற்ற கருத்துக்கள். இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளது. தன்னை குற்றவாளி போல காட்டியுள்ளது" என விஜய் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் நடிகர் விஜய் மீதான விமர்சன கருத்தை நீக்குமாறு உத்தரவு பிறப்பித்தனர்.