செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனு: 22 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.. அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கப் பிரிவினரால், நேற்று முன் தினம் இரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது கணவரை அமலாக்கப் பிரிவினர் சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வில் முறையிட்டார். அப்போது அவர், நேற்று முன் தினம் காலை 7 மணி முதல் அமலாக்கப்பிரிவினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தியுள்ளனர் எனவும், விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்த நிலையில், சட்டவிரோதமாக காவலில் வைத்திருப்பதாக தெரிவித்தார்.
கைது செய்த போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், கைது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய அவர், இந்த வழக்கை அவசர வழக்காக நேற்று பிற்பகல் விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு எண்ணிடப்பட்ட விஷயத்தை, நீதிமன்றத்தில் தெரிவித்தால், வழக்கு நேற்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த வழக்கை விசாரிக்க அமர்வில் இருந்த நீதிபதி சக்திவேல் விலகியதால் இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெறவில்லை.
இதையடுத்து, நேற்று மாலை வேறு ஒரு அமர்வில் இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வரவிருந்தது. இதற்கிடையில், செந்தில்பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வரவில்லை. இந்நிலையில், இன்று, நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் செந்தில்பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்து ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை தரப்பிலும் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பிலும் வழக்கறிஞர்கள் பரபரப்பான வாதங்களை முன்வைத்தனர். குறிப்பாக செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோ தனது வாதத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக தகவல் தெரிவிக்காதது சட்டவிரோதம். ரிமாண்ட் செய்ததில் சட்டவிரோதம் இருந்தால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யலாம். செந்தில் பாலாஜி விவகாரத்தில் கைது செய்யப்படும் நடைமுறை பின்பற்றப்படவில்லை.
எந்த நோட்டிஸும் அளிக்கவில்லை. குடும்பத்தினருக்கும் தகவல் தரவில்லை. தற்போதைய நிலையில் நீதிமன்றக் காவலிலேயே காவேரி மருத்துவமனையில் சிகிச்சை தர வேண்டும். செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள் என இளங்கோ வாதம் செய்தார். விசாரணைக்கு பிறகு தீர்ப்பை பிற்பகலில் அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஆட்கொணர்வு வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications