குழந்தையைத் தத்தெடுக்க அனுமதி கோரிய திருநங்கை.. மனுவை முடித்துவைத்த உயர்நீதிமன்றம்
சென்னை: சென்னையில் காவல் துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் பிரித்திகா யாஷினி என்பவர் ஆதரவற்ற குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்து மத்திய தத்தெடுப்பு ஆணையத்தில் விண்ணப்பித்திருந்த நிலையில், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, குழந்தையைத் தத்தெடுக்க அனுமதி வழங்கக் கோரி திருநங்கை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.
ஆதரவற்ற குழந்தையை தத்தெடுக்க விரும்பும் தம்பதி அல்லது ஆண், பெண் மத்திய தத்தெடுப்பு ஆணையத்தில் விண்ணப்பம் செய்து தத்தெடுத்துக் கொள்ளலாம். இதற்காக பல்வேறு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள் குழந்தைகளைத் தத்தெடுக்க சட்ட விதிகள் எதுவும் இல்லை. இந்நிலையில், சென்னையில் காவல் துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் திருநங்கை பிரித்திகா யாஷினி என்பவர் குழந்தையைத் தத்தெடுக்க அனுமதி வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரணை செய்து சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

காவல் துறை ஆய்வாளர் திருநங்கை கே.பிரித்திகா யாஷினி சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: நான் சென்னையில் காவல் துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறேன். தனிமையில் வாழும் நான் ஆதரவற்ற குழந்தையைத் தத்தெடுத்து வளா்க்க முடிவு செய்தேன். இதற்காக மத்திய அரசு நிறுவனமான மத்திய தத்தெடுப்பு ஆணையத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தேன்.
ஆனால், திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக எனது விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனா். இது சட்டவிரோதம். எனவே, விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, குழந்தையைத் தத்தெடுக்க எனக்கு அனுமதி வழங்க மத்திய தத்தெடுப்பு ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தாா்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் கே.வி.சஞ்சீவ்குமாா் ஆஜரானர். மனுதாரா் பிரித்திகா யாஷினி திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏற்புடையது அல்ல என்று வாதம் செய்தார். அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான துணை சொலிசிட்டா் ஜெனரல் விவேகானந்தன், சிறாா் நீதி சட்டத்திலும், தத்தெடுப்பு விதிகளிலும் மூன்றாம் பாலினத்தவா் தத்தெடுக்க அனுமதிக்கும் விதிகள் எதுவும் இல்லை. எனவே, மனுதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்றும் வாதிட்டாா்.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மூன்றாம் பாலினத்தவா்களுக்கு குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமைகளை வழங்கக் கோரி மனுதாரா் மத்திய அரசுக்கு 2 வாரங்களில் மனு அனுப்ப வேண்டும் என்றும், அந்த மனுவை 12 வாரங்களுக்குள் பரிசீலனை செய்து மத்திய அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications