நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை.. உயர்நீதிமன்றத்தில் பரபர வாதம்
சென்னை: தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய்சேதுபதி தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் நடிகர் விஜய்சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த மகாகாந்தி மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக நவம்பர் 2ஆம் தேதி இரவு பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்தபோது, அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாக கூறியிருந்தார்.
ஆனால் தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

விஜய் சேதுபதிக்கு எதிராக வழக்கு
அந்த மனுவில் உண்மை சம்பவங்கள் இவ்வாறிருக்க, மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். எனவே நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

வழக்கு தொடர்பாக விசாரணை
அந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றம், கடந்த ஜனவரி 4ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் சம்மனை ரத்து செய்யக் கோரியும், வழக்கையும் ரத்து செய்யக்கோரியும் நடிகர் விஜய்சேதுபதி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி .டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

விளம்பர நோக்கத்தில் வழக்கு
அப்போது, விஜய் சேதுபதி தரப்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி பெங்களூரு எல்லை தொடர்புடைய வழக்கை சென்னையில் தொடர்ந்தது, அதை சைதாப்பேட்டை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது, இயந்திரத் தனமாக உடனடியாக சம்மன் அனுப்பியது, சமரசம் ஏற்பட்டதை மறைத்து அவதூறு வழக்கு என அடுத்தடுத்த தவறுகள் நடந்துள்ளதாக வாதிட்டார். மேலும் சட்டத்தை மகாகாந்தி தவறாக பயன்படுத்தியுள்ளார். பெங்களூர் போலீசில் ஒன்றும் நடக்கவில்லை என்று எழுதி கொடுத்து விட்டு, அதை மறைத்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

நடவடிக்கைக்கு தடை
மகாகாந்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவம் பெங்களூரில் நடந்தாலும், சென்னையில் காயம் காரணமாக மகாகாந்தி சிகிச்சை பெற்றுள்ளதால் வழக்கு தொடர முடியும் என்ற வாதத்தை முன் வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பெங்களூர் காவல் நிலையத்தில் ஒன்றும் நடக்கவில்லை என்று புகார்தாரர் எழுதி கொடுத்தாரா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி, மனு மீதான இறுதி விசாரணையை மார்ச் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications