தீபம் என்ற பெயரில் விளக்கேற்றும் எண்ணெய் விற்கக்கூடாது.. இடைக்கால தடை விதித்த சென்னை ஐகோர்ட்!
சென்னை: தீபம் என்ற பெயரில் விளக்கேற்றும் எண்ணெய் வகைகள் விற்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காளீஸ்வரி நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது சென்னை ஐகோர்ட்.
சென்னையை சேர்ந்த காளீஸ்வரி நிறுவனம், கோல்டு வின்னர், கார்டியா லைஃப், ஒரைசா உள்ளிட்ட டிரேட் மார்க்குடன் எண்ணெய் வகைகளையும் 5 க்கும் மேற்பட்ட விளக்கேற்றும் எண்ணெய் வகைகளையும் விற்பனை செய்து வரும் பிரபல நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

இதில் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் மிகவும் பிரபலமான டிரேட் மார்க்குடன் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையை சேர்ந்த செல்வமாதா ஆயில் நிறுவனம் துர்கா தீபம் விளக்கேற்றும் எண்ணெய் என்ற பெயரில் தங்களுடைய டிரேட் மார்க்கான தீபம் என்ற பெயரை பயன்படுத்தி சேலம், கோவை, புதுக்கோட்டை மற்றும் பெங்களுர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருகிறது.
இது சட்டவிரோதமானது என்றும் இதனால் தங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் தீபம் என்ற தங்களுடைய டிரேட் மார்க்கை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காளீஸ்வரி நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, தீபம் விளக்கேற்றும் எண்ணெய் உலக அளவில் சந்தைப்படுத்த முயற்சி எடுத்து வரும் நிலையில் தங்களுடைய நிறுவனத்தின் தீபம் என்ற டிரேட் மார்க் சில நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி லாபமடைந்து வருவதாக தெரிவித்தார்.
அந்த நிறுவனங்கள், தீபம் என்ற டிரேட் மார்க்கை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தீபாவளி பண்டிக்கையொட்டி நடக்கும் வணிகத்தில் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வாதம் வைத்தார்.
இதை ஏற்ற நீதிபதி, தீபம் என்ற டிரேட் மார்க் பெயரை பயன்படுத்தி விளக்கேற்றும் எண்ணெய் வகைகளை விற்க செல்வமாதா ஆயில் நிறுவனத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications