ஆன்லைன் கிளாசில் பாலியல் தொல்லை.. ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குண்டாஸ் ரத்து -உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை : ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சென்னை கே.கே.நகரில் உள்ள பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபாலன். இவர், அங்கு பயின்ற மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பின்போது, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்து புகைப்படம் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆசிரியர் பணியின் போது கண்ணியக்குறைவாகவும், ஆசிரியர் பணிக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட ராஜ கோபாலனுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.

ராஜகோபாலன் மீது குண்டர் சட்டம்
இந்த நிலையில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிஒருவர் சென்னை அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தார். மேலும் சில புகார்களும் அவர் மீது குவிந்தன. இந்தப் புகாரின் அடிப்படையில், அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்து, சிறையிலடைத்தனர். இதனையடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால், அவரது ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. தொடர்ந்து ராஜகோபால் மீது புகார்கள் குவிந்த நிலையில், ராஜகோபாலன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மனைவி மனு
இந்த உத்தரவை ரத்து செய்து, தனது கணவரை விடுதலை செய்யக் கோரி, ராஜகோபாலனின் மனைவி சுதா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் தனது கணவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அப்போது ஆன்லைன் வகுப்புகள் ஏதும் நடைபெறவில்லை எனவும் கூறியுள்ளார்.

தாமதமான புகார்
தாமதமாக அளிக்கப்பட்ட புகாரில், முழுமையாக உண்மையை கண்டறியாமல் செவி வழி தகவலின் அடிப்படையில் வழக்குப்பதியப்பட்டு உள்ளதாகவும், எந்த ஆதாரங்களும், அடிப்படையும் இல்லாமல் தனது கணவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

குண்டர் சட்டம் ரத்து
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா அடங்கிய அமர்வு, சம்பவம் நடைபெற்ற போது ஆன்லைன் வகுப்புகள் இல்லை என்பதை கருத்தில் கொள்ளாமல், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதாகவும், குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பதற்கான காரணங்களை, குறித்த காலத்தில் வழங்கவில்லை என்றும் கூறி, ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications