கிண்டி கலைஞர் மருத்துவமனை விரைவில் திறப்பு..பட்ஜெட்டில் அறிவிப்பு..சென்னை மக்களுக்கு குட்நியூஸ்
சென்னையில் கட்டப்பட்டுள்ள கிண்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை விரைவில் திறக்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிண்டியில் கட்டப்பட்டு வரும் கருணாநிதி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை விரைவில் திறக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதன் அடிப்படையில், தென் சென்னையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகிலே எந்த முதல்வரும் பெற்றிராத பெருமையைக் கொண்டவர் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக ஆட்சிக் கட்டிலிலே அமர்ந்து, நல்லாட்சி நடத்தியவர் - சீர்மிகு திட்டங்களை பார்போற்றும் வகையில் தீட்டிச் செயல்படுத்தியவர் - ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்றத் தலைவராக விளங்கியவர் - பெரியாரின் சலியாத உழைப்பும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அயராத தொண்டும், பேரறிஞர் அண்ணா அவர்களின் பரந்த உள்ளமும் தன்னகத்தே கொண்டிருந்தவர் - உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர்.

தன் அரசியல் அனுபவங்கள் அனைத்தையும், அடித்தட்டில் வாழ்கிற மக்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டவர். தமிழகத்தின் மருத்துவத் துறையில் முத்திரை பதித்த முக்கியத் திட்டங்கள் அனைத்தும், அவரின் சிந்தனையில் உதித்தவையே.
ஏழை எளியோர் ஏற்றம் பெற, தம் வாழ்நாளில் அவர் பல்வேறு நலத் திட்டங்களை இந்த நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்ததோடு மட்டுமின்றி, தான் வாழ்ந்த இல்லத்தை ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ வசதியினைத் தரும் மருத்துவமனையாகப் பயன்படுத்துவதற்கு தானமாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நம் நெஞ்சமெல்லாம் வீற்றிருக்கும் அவரின் நினைவைப் போற்றும் வகையில், சென்னைப் பெருநகரத்தில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், 250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த மருத்துவத்திற்கான கட்டடப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கிண்டி கருணாநிதி மருத்துவமனை விரைவில் திறக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் சென்னை கிண்டியில் 1000 படுக்கைகளுடன் கூடிய கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும். அரசு ஸ்டான்லி மருத்துவனையில் புதிய பன்னோக்கு சிகிச்சை மையம், செவிலியர் விடுதி கட்டப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications