காசிமேட்டில் ஒரே குஷி.. சென்னையில் வஞ்சிரம், நெத்திலி தந்த ஹேப்பி.. ஈரோட்டில் பாறை மீனுக்கு என்னவாம்
சென்னை: ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், நேற்றைய தினம் மீன்கள் விலையில் நிறைய மாறுதல்கள் தென்பட்டன.. ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு விலையில் மீன்கள் விற்கப்பட்டிருக்கின்றன.. இதற்கு என்ன காரணம்?
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், வழக்கமாக விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் மீன் வாங்க வருவோர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். அதிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் விடிகாலையிலேயே , மீன்பிரியர்கள் காசிமேட்டுக்கு வர துவங்கிவிடுவார்கள்.

அதிகாலையில் கூட்டம்: அந்தவகையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற சுமார் 100 விசைப்படகுகள் அதிகாலையிலேயே கரைதிரும்பிவிட்டன.. இதனால் மீன்கள்வரத்தும் அதிகமாகவே காணப்பட்டது..
குறிப்பாக பெரிய ரக மீன்களான வஞ்சிரம், வவ்வால், பாறை மற்றும் கடம்பா, இறால், உள்ளிட்ட மீன்கள் அதிகமாக குவிந்து விற்பனை செய்யப்பட்டது. இதில், இறால், கடமா, நண்டுகள் வரத்து சற்று குறைவாகவே இருந்தது.. அதேபோல, கொடுவா மீன்கள் வரத்து சுத்தமாக இல்லை.
இப்போது ஆடி மாதம் என்பதால் ஏராளமானோர் அம்மனுக்கு கூழ் ஊற்றுவார்கள். இதனால் மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது... காசிமேடு மீன்பிடி துறைமுகம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நேற்று காலையிலிருந்து இரவு வரை நிரம்பி வழிந்தது. இதனால் வியாபாரம் களைகட்டியதால் மீன் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருக்கை மீன்கள்: வஞ்சிரம் மீன் கிலோ 1200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.. கொடுவா மீன்கள் 500 வரை விற்பனை செய்யப்பட்டன.. ஷீலா மீன் 350 ரூபாய்க்கும், திருக்கை மீன்கள் 400 ரூபாய்க்கும், நண்டு வகைகள் 450 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. அதேபோல சைனீஸ் வவ்வால் - ரூ.1300, கடமா - ரூ.400, சிறிய மீன்கள் - ரூ.50 முதல் 100 வரை விற்கப்பட்டன.
எனினும், கடந்த வாரத்தைவிட சங்கரா மீன்கள் வரத்து அதிகமாக இருந்ததால், அது மட்டும் ரூ.200-க்கு விற்கப்பட்டது. மற்றபடி வஞ்சிரம், வவ்வால் உள்ளிட்ட மீன்களின் விலையும் குறைந்து விற்கப்பட்டதால் மீன் பிரியர்கள் போட்டி போட்டு மகிழ்ச்சியுடன் மீன்களை வாங்கி சென்றனர்.
என்ன காரணம்: இதனிடையே, ஈரோடு மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்து குறைவால் விலை உயர்ந்து விற்பனையானது. ஈரோடு ஈவிஎன் சாலை ஸ்டோனி பாலம் அருகே செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டுக்கு நாகப்பட்டினம், ராமேஸ்வரன், காரைக்கால், தூத்துக்குடி மற்றும் கேரளா,கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து அதிக அளவில் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
அந்தவகையில், வாரந்தோறும் 10 முதல் 15 டன்கள் வரை மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால், இப்போது கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மீன்பிடி தடைகாலம் உள்ளதால் வெறும் 8 டன் மீன்களே விற்பனைக்கு வந்தது. வரத்து குறைவால் மீன்கள் விலையும் உயர்ந்து காணப்பட்டது..
ஈரோடு மார்க்கெட்: அந்தவகையில், வஞ்சிரம் கிலோ, ரூ.1,100, கடல் பாறை-ரூ.500, சங்கரா-ரூ.350,நெத்திலி-ரூ.300, அயிலை-ரூ.300, மத்தி-ரூ.350, இறால்-ரூ.700, திருக்கை-ரூ.400,புளூ நண்டு ரூ.700,விளமீன் ரூ.500, வவ்வால் ரூ.800, அணை மீன்களான லோகு ரூ.170, ஜிலேபி ரூ.120, கட்லா ரூ.170. பாறை ரூ.160, நெய் மீன் ரூ.150க்கு விற்பனையானது.
விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்ட போதிலும், மீன்பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சென்றார்கள். எனினும், கர்நாடகா,கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் முடிந்ததுமே, மீன்கள் விலை குறைந்துவிடும் என்கிறார்கள் ஈரோடு மீன் வியாபாரிகள்.












Click it and Unblock the Notifications