கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் 50% பஸ்கள்.. சென்னை ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டண புகாருக்கு 24/7 வசதி
சென்னை: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து பயணிகள் தொலைபேசி வாயிலாகவோ, வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவாகவோ புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆம்னி பேருந்துகளில் 50% மட்டுமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகளுக்கு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்து கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. அதிலும் இந்த முறை, கற்பனை செய்ய முடியாத அளவுக்கு கட்டணம் எகிறி உள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை- நெல்லை, மதுரை, கோவை, திருச்சி போன்ற வழித்தடங்களில் தனியார் பேருந்து கட்டணங்கள் வழக்கமான விலையை பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஆம்னி பஸ் கட்டண கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்க துவங்கினர்.
ஆம்னி பஸ்களில் கட்டணம்
இதையடுத்து, ஆம்னி பஸ்களில் கட்டணத்தைக் குறைக்கத் தவறினால், அந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் 2 நாட்களுக்கு முன்புகூட கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதைத் தடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் போக்குவரத்து ஆணையர் தலைமையில் காவல் துறை இணை மற்றும் ஆணையர்கள், பொது மேலாளர் CMDA, துணை மேலாளர், MTC, மேலாண் இயக்குநர், SETC மற்றும் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் 14.10.2025 அன்று மாநில போக்குவரத்து ஆணையரகத்தில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கிளாம்பாக்கம் 50 சதவீதம் பஸ்
அக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான பயணங்களை சிரமமின்றி மேற்கொள்ளவும் அதே சமயத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டும் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் சென்று வர கூடுமான வரை வேண்டாம் எனவும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, ஆம்னி பேருந்துகளில் 50% மட்டுமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் சுங்கச்சாவடிகளில் இடையூறு இன்றி செல்ல தனியான வழித்தடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு அதனை கண்காணிக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் உள்ள 12 சரகங்களில் சிறப்பு பறக்கும் படை (Enforcement Team) குழு அமைக்கப்பட்டு 16.10.2025 முதல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆம்னி பேருந்துகள் - புகார்கள்
பொதுமக்கள் போக்குவரத்து தொடர்பான புகார்களை 24/7 தெரிவிக்கும் பொருட்டு தமிழகம் உள்ள 12 சரக அலுவலகங்களிலும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் செய்திதாள் மற்றும் செய்தி தொலைக்காட்சி வாயிலாக வெளியிடப்பட்டுள்ளன.
இச்செயல்பாட்டின் மூலம் இதுவரை 357 சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு ரூ.4355961/- இணக்க கட்டணம் மற்றும் வரியாக பெறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு Abhi Bus, Red Bus. Make My Trip போன்ற முன் பதிவு ஆன்லைன் செயலிகள் கண்காணிக்கப்பட்டு அதிகமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளை கண்டறிந்து கட்டணங்களை குறைக்க அறிவுறுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து கீழ்க்காணும் எண்கள் மூலம் தொலைபேசி வாயிலாகவோ, வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவாகவோ புகார் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications