முருங்கைக்காய் விடுங்க.. வெறும் 1 கிலோ பூண்டு ரூ.500.. முழிக்குது சென்னை கோயம்பேடு.. தடதட தமிழ்நாடு
சென்னை: நாளுக்கு நாள் பூண்டு விலை உயர்ந்து காணப்படுகிறது.. ஒரு கிலோ பூண்டு விலை 500 ரூபாய் விற்கப்படுவதால், இல்லத்தரசிகள் கவலையிலும், கதிகலங்கியும் போயுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை பருவமழை காரணமாக, காய்கறிகளின் விளைச்சலிலும் மாற்றம் தென்பட்டது.. வடகிழக்கு பருவமழையின் மாற்றங்களால் வெங்காயத்தின் விளைச்சல் வெகுவாக குறைய ஆரம்பித்தது.

வெங்காயம்: இதன்காரணமாக, ஒரு கிலோ சின்ன வெங்காயம் 150 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அளவுக்கு அதிகமாகவே பாதிக்கப்பட்டனர். ஆனால், கடந்த வாரம் கோயம்பேடு சந்தைகளில் வெங்காயம் விலை ரூ.10ஆக திடீரென குறைந்துவிட்டது. ஆனால், பூண்டு விலை அதிகரித்துவிட்டது.
கடந்த வாரம், சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு ஒரு கிலோ பூண்டு ரூ.450 வரை விற்பனை செய்யப்பட்டது. நீலகிரி, கொடைக்கானல், திண்டுக்கல், ஈரோடு போன்ற மாவட்டங்களில்தான் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பூண்டு உற்பத்தி அதிகமாக செய்யப்படுகிறது. இதைதவிர, வெளிமாநிலங்களிலிருந்தும் நமக்கு பூண்டு இறக்குமதியாகிறது.
அறுவடைக்காலம்: இப்போது, பூண்டு அறுவடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையிலும், வழக்கத்துக்கு மாறாக, சென்னை கோயம்பேடு சந்தைக்குப் பூண்டு வரத்து குறைந்துவிட்டது..
மேலும், உத்தரப்பிரதேசத்தில் இருந்து நமக்கு இறக்குமதி செய்யப்படும் பூண்டு, விளைச்சல் இப்போது குறைந்துவிட்டது. இதனால், கிட்டத்தட்ட 70 சதவீதம் வரை வரத்தும் குறைந்துவிட்டது. அதனால்தான், பூண்டின் விலையும் உயர்ந்துவிட்டதாகவும், இன்னும் ஒரு மாத காலத்திற்கு இந்த விலை உயர்வு இருக்கும் என்றும் வியாபாரிகள் கவலை தெரிவித்திருந்தனர்.
ஒரு கிலோ பூண்டு: இந்நிலையில், ஒரு கிலோ பூண்டு விலை 500 ரூபாயை எட்டிவிட்டது.. உதிரி பூண்டு ஒரு கிலோ ரூ.350-க்கு விற்கப்படுகிறது. கடந்த வருடம் தொடக்கத்தில், ஒரு கிலோ பூண்டு வெறும் ரூ.50-க்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் இப்போது, 10 மடங்கு வரை விலை எகிறிவிட்டது..
அதனால், அத்தியாவசியப் பொருட்களான பூண்டு பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மொத்த வியாபாரிகளும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.
ஆனால், கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம், சின்ன வெங்காயம், பீன்ஸ், அவரைக்காய், உஜாலா கத்தரிக்காய் போன்ற காய்கறிகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது. இஞ்சி 105 ரூபாய், ஊட்டி கேரட் 80 ரூபாய், அவரைக்காய் 30 ரூபாய், பச்சை மிளகாய் 30, தக்காளி 30 ரூபாய், சின்ன வெங்காயம் 30 ரூபாய், பீன்ஸ் 30 ரூபாய், ஊட்டி பீட்ரூட் 50 ரூபாய், வெங்காயம் கிலோ 20 ரூபாய், முள்ளங்கி 20 ரூபாய் மற்றும் வெண்டைக்காய் 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஊட்டி சீசன்: சீசன்முடிந்து வரத்து குறைந்துள்ளதால் ஊட்டி கேரட் விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.65-க்கும் விற்கப்படுகிறது... அதேபோல, தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.120-க்கும் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications