ஸ்டாலின் பக்கத்தில் ரஜினி! ஓடோடி வந்து வரவேற்ற உதயநிதி! கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் சுவாரசியம்
சென்னை: சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதன் திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் மு.க ஸ்டாலினுடன் பேட்டரி காரில் அமர்ந்து நினைவிடத்தை சுற்றிப்பார்த்தனர்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி காலமானார். இதையடுத்து, அவரது உடல் சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அமைந்துள்ள வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைந்ததும் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட மெரினாவில் அவருக்கு நினைவிடம் கட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி தமிழக அரசு சார்பில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ 39 கோடியில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது. சென்னை மெரினாவில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம், புதிதாக அமைக்கப்பட்ட கருணாநிதி நினைவிட திறப்பு நிகழ்ச்சி திங்கள் கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்துகொண்டு இந்த நினைவிடங்களை திறந்து வைக்கும் அடையாளமாக கல்வெட்டை திறந்துவைத்தார்.

அண்ணா நினைவிடத்தின் உள்ளே அண்ணா அமர்ந்தவாறு புத்தகம் படிப்பது போன்று நிறுவப்பட்ட வெண்கலச் சிலையை முக ஸ்டாலின் திறந்துவைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அண்ணாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதி நினைவிடம் அருகே அவர் அமர்ந்த நிலையில் எழுதுவது போன்று நிறுவப்பட்ட வெண்கல சிலையையும் முதல்வர் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். வியட்நாம் நாட்டின் மார்பிள் கல்லில் பிரமாண்டமாக செதுக்கப்பட்ட கருணாநிதியின் உருவப்படத்தின் முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
கருணாநிதி நினைவிடத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றும் வகையில் 20 ஆயிரம் சதுரடியில் கலைஞர் உலகம்' என்ற பெயரில் டிஜிட்டல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகத்தில் கருணாநிதியின் சாதனைகள், திட்டங்களை எதிரொலிக்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள கலைஞர் எழில் ஓவியங்கள்', உரிமை வீரர் கலைஞர்', கலைஞருடன் செல்பி', கலைஞரின் சிந்தனை சிதறல்கள்', நவீன தமிழ்நாட்டின் சிற்பி' போன்ற அரங்குகளை பார்வையிட்டார்.
முதல்வர் கருணாநிதி குறித்த அரிய புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், மற்றும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பார்த்து வியந்தனர். இந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் மு.அப்பாவு, தமிழக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கருணாநிதியின் மகள் செல்வி, மகன் தமிழரசு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனார். முன்னதாக விழாவுக்கு வருகை நடிகர் ரஜினிகாந்த் வரும் போது, முதல் ஆளாக நின்று அமைச்சர் உதயநிதி வரவேற்றார். பின்னர்
நினைவிடத்தை திறந்து வைத்த பிறகு நினைவிட வளாகத்தை பேட்டரி காரில் சென்று முதல்வர் முக ஸ்டாலின் சென்று பார்த்தார். அப்போது முதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்தும் பேட்டரி காரில் சென்றார். அப்போது, நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் உள்ளிட்டவை குறித்து ரஜினிகாந்திற்கு முக ஸ்டாலின் விளக்கினார். ரஜினிகாந்தும் கவனமாக அதை கேட்டார்.
அண்ணா நினைவிட திறப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் கருணாநிதி நினைவிடத்தை நோக்கி பேட்டரி காரில் செல்லும் போது முதல்வர் முக ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்திடம் நினைவிட வடிவமைப்பு எப்படி இருக்கிறது? என்று கேட்டார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த் செய்கை மூலம் சூப்பராக இருக்கிறது என்று பாராட்டினார்.












Click it and Unblock the Notifications