சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? அவரே சொன்ன ஷாக் தகவல்
சென்னை: சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியாவுக்கு மாத ஊதியம் என்ன என்பதை அவரே வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை திருவிக நகரை சேர்ந்தவர் பிரியா ராஜன். இவர் கன்னிகா பரமேஸ்வரி பெண்கள் கலைக் கல்லூரியில் காமர்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவர் பெரம்பூர் எம்எல்ஏவாக இருமுறை இருந்த செங்கை சிவத்தின் பேத்தியாவார்.

29 வயதாகும் பிரியா தற்போது சென்னை மாநகராட்சியின் 49ஆவது மேயராக கடந்த ஆண்டு பதவியேற்றார். இவர் 74 ஆவது வார்டில் கவுன்சிலராக வென்றுள்ளார். முதல்வர் ஸ்டாலின் பதவி வகித்த சென்னை மேயர் பதவிக்கு யாரை நியமிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில் முதுகலை பட்டம் பெற்ற பிரியாவை மேயராக அறிவித்தார்.
வடகிழக்கு மழைக்காலங்களில் இவர் மழை உறை அணிந்து கொண்டு இரவு என்றும் பாராமல் மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். சென்னை மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்தி தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றி வருகிறார். இவர் வயதில் சிறியவர் , இவர் போய் மேயரா என்ற விமர்சனங்கள் இருந்தாலும் இவர் தனது பணிகளை செவ்வனே செய்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. சென்னை மேயர்களிலேயே இளம் வயது மேயராக பதவி வகித்து வருகிறார் பிரியா. பட்டியலினத்தை சேர்ந்த முதல் பெண் மேயரும் இவர்தான். இவர் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என் அப்பா திமுகவில் இருந்து வருகிறார். அவர்தான் என்னை அரசியலுக்கு வர விருப்பம் இருக்கிறதா என கேட்டார்.
நானும் பொதுமக்களுக்கு சேவை செய்ய இது ஒரு நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்பதால் ஒப்புக் கொண்டு கட்சி பணியாற்றினேன். கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வென்றேன். பிறகு என்னை மேயராக முதல்வர் அறிவித்ததும் எனக்கு மகிழ்ச்சியாகிவிட்டது. எனக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தவர்கள் அமைச்சர்கள் சேகர்பாபுவும் மா.சுப்பிரமணியனும்தான்.
அதன் பிறகு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆசிப்பெற்றேன். அப்போது அவர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்மா என்றார். இந்த பதவியில் ஏற்கெனவே முதல்வர் இருந்துள்ளதால் அந்த பதவியில் உட்காரும் நமக்கு பொறுப்பு அதிகம் என்பதை உணர்ந்தேன். என் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாத நிலை உள்ளது.
ஆனாலும் மக்கள் பணியில் இருப்பதால் அதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. நான் களத்திற்கு சென்றால், டிவியில் பார்க்க கொஞ்சம் பெரிய பெண் போல் இருக்கிறார். நேரில் தம்மாதுண்டு பொண்ணாட்டம் இருக்காரே என என் காது படவே பேசுவார்கள். அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் நமக்கு கொடுத்த பணியை செய்துகிட்டே இருக்க வேண்டும்.
என்னை பற்றி நிறைய டிரோல் செய்வார்கள். சிலதை பார்க்கும் போது சிரிப்பு வரும், சில மீமை பார்க்கும் போது மனசு கஷ்டமாக இருக்கும். ஆனால் அந்த மீம் போட்டவரை மற்ற நெட்டிசன்கள் "அவங்களுக்கும் குடும்பம் இருக்கு, இப்படி செய்யலாமா" என கேட்கும் போது மனதிற்கு ஆறுதலாக இருக்கும். எல்லாதுறைகளிலும் பெண்கள் தடம்பதிக்க வேண்டும்.
குறிப்பாக அரசியலுக்கு வர வேண்டும். யார் கிண்டல் செய்தாலும் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் கொடுத்த வேலையை செய்ய வேண்டும். அது போல் இப்படி ஆகியிருந்தால் இந்த சம்பளம் கிடைத்திருக்கும், அப்படி ஆகியிருந்தால் அந்த சம்பளம் கிடைத்திருக்கும் என ஒப்பீடு செய்யக் கூடாது. சம்பளம் வாழ்வாதாரத்திற்கு முக்கியம்தான். ஆனால் நாம் செய்யும் வேலையில் சம்பளத்தை பார்க்காமல் நமது தனித்துவத்தை காட்ட வேண்டும் என்றார்.
மேயர் பிரியாவிடம் நீங்கள் எவ்வளவு ஊதியம் வாங்குகிறீர்கள் என நெறியாளர்கள் கேட்டனர். அதற்கு பிரியா, நான் மாதம் ரூ 30 ஆயிரம் வாங்குறேன். துணை மேயருக்கு 15 ஆயிரம் ஊதியம். அது போல் கவுன்சிலர்களுக்கு ரூ 10 ஆயிரம் ஆகும் என மேயர் பிரியா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications