தமிழகத்தில் வெயிலுக்கு பிரேக்.. வரும் நாட்கள் ஜாலி தான்.. பெய்யப்போகுது மழை.. எங்கெல்லாம் தெரியுமா
அடுத்து வரும் நாட்களில் எந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதை வானிலை மையம் விளக்கியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் உச்சத்தில் இருந்து வருகிறது. இதனிடையே வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை இருக்கும் என்பது தகவல்களைச் சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாட்டில் பெரும்பாலும் எங்கும் பெரியளவில் மழை இல்லாமலேயே இருந்து வருகிறது. கடந்த ஜன. மாதம் வடகிழக்கு பருவமழை நிறைவடைந்த நிலையில், அதன் பின்னர் மழை பெரியளவில் இல்லை.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக இருந்ததால் ஏற்கனவே மாநிலத்தில் இருக்கும் பெரும்பாலான நீர்பிடிப்பு பகுதிகள் நிரம்பிவிட்டது. இதன் காரணமாக வரும் கோடைக் காலத்தில் தண்ணீர் பிரச்சினை இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பம்
கடந்த பிப். மாதம் மாநிலத்தில் பல இடங்களில் வெப்பம் அதிகரித்துவிட்டது. குறிப்பாக ஈரோட்டில் சில நாட்கள் வெப்பம் சதமும் அடித்தது. கடந்த 24 மணி நேரத்திலும் ஈரோட்டில் தான் வெப்பம் அதிகமாகப் பதிவாகியுள்ளது. அங்கு 36.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அதேபோல தமிழ்நாட்டில் மற்ற பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பத்தில் பெரியளவில் வேறுபாடு இல்லாமல்... இயல்பு நிலையிலேயே இருந்தது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் எங்கும் பெரியளவில் மழையும் இல்லை.

வானிலை மையம்
இன்றும் (பிப்.12) நாளையும் (பிப்.13) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். கிழக்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக 14.03.2023 - 15.03.2023: தென் தமிழ்நாடு, டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எங்கே மழை
பிப்.16ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 - 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 - 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை
மீனவர்களுக்காக எச்சரிக்கை எதுவுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் பிப். மாதமே வெப்பம் உச்சம் தொட்டது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப். மாதம் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்போதே வெப்பம் இந்தளவுக்கு இருக்கும் நிலையில், வரும் காலத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications