மிரட்டுது மெட்ரோ ரயில்.. எத்தனை நாள் ஏக்கம்! மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ எப்போது? செம அப்டேட்!
சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாகக் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் சேவை வெற்றிகரமாக இரு வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான சேவை 2027 மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக சென்னை மாநகரம் திணறி வருகிறது. மக்கள் தொகையோடு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக சென்னைவாசிகள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அந்த வகையில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், மின்சார ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவையானது வழங்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ
தற்போது சென்னையில் நீலம் மற்றும் பச்சை வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நீல வழித்தடத்தில் சென்னை விம்கோ நகரில் இருந்து சென்னை விமான நிலையம் வரையிலும், பச்சை நிற வழித்தடத்திலும் சென்னை சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது சென்னை எழும்பூர், விமான நிலையம், கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மெட்ரோ ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
சென்னை மெட்ரோ விரிவாக்கம்
மேலும் பல புறநகர் பகுதிகளில் மெட்ரோ ரயில் வசதிகள் இல்லாததால் இரண்டாம் கட்டமாக தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது சுமார் 63 ஆயிரத்து 466 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் இந்த மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன. பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையிலான ஒன்பது கிலோமீட்டர் தூரப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், டிசம்பர் மாதத்தில் அது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ரோ II பணிகள்
ஓஎம்ஆர் சாலையிலும் மெட்ரோ II பணிகள் முடிந்துள்ள நிலையில் 2027 ஆம் ஆண்டு அங்கு போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான சேவை 2027 மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த வழித்தடம் சென்னை மெட்ரோவின் ஐந்தாவது வழித்தடம் என்பது குறிப்பிடத்தக்கது.
மாதவரம் மெட்ரோ
மாதவரம் பால்பண்ணையில் தொடங்கும் இந்த வழித்தடம் கோயம்பேடு, போரூர், ஆலந்தூர் வழியாக சோழிங்கநல்லூர் வரை 48 கிலோமீட்டர் பயணிக்கிறது. மொத்தம் ஐந்து சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள், 39 உயர்நிலை ரயில் நிலையங்களுடன் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வழித்தடத்தில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் 2027 மார்ச் மாதம் 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
பூவிருந்தவல்லி - போரூர் மெட்ரோ
இதே போல பூவிருந்தவல்லி - போரூர் இடையே ஆறு பெட்டிகள் கொண்ட ஆளில்லா முதல் மெட்ரோ டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்றும், 2026 ஜூன் மாதம் போரூர் - கோடம்பாக்கம், கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையேயான ரயில் சேவையும் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது இரண்டாம் கட்டப் பணிகள் இறுதி நிலையில் இருக்கும் நிலையில் 2027 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக அனைத்துப் பணிகளும் நிறைவடையும் எனச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications