பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதில் தாமதம்! இழுத்தடிக்கும் ரயில்வே வாரியம்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான சில அத்தியாவசிய ஒப்புதல்களைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவைகளைத் தொடங்க இந்த அனுமதி மிக அவசியமானதாகும்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. எதிர்பார்த்ததைவிட மெட்ரோவுக்கு கூடுதல் வரவேற்பு கிடைத்த நிலையில், சென்னையின் பிற பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இந்த பணிகளுக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்க தாமதமாகியிருப்பதால், விரிவாக்கம் தொய்வடைந்திருக்கிறது.

குறிப்பாக சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான சில அத்தியாவசிய ஒப்புதல்களைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. திட்டம் பரிசோதனை செய்யப்பட்டு 3 மாதங்கள் கடந்த நிலையிலும், ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு, ரயில்வே அமைச்சகத்தின் ரயில்வே வாரியம் ஆகியவற்றின் ஒப்புதல்களுக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் காத்திருக்கிறது.
இந்த தாமதம் குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் மத்திய அரசின் திட்ட கண்காணிப்புக் குழுவிடம் சென்னை மெட்ரோ நிறுவனம் முறையிட்டுள்ளது. இதில் திட்ட கண்காணிப்பு குழு என்பது, நாட்டின் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஏற்படும் தடங்கல்களை நீக்குவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது.
ரயில், சிக்னல், தொலைத்தொடர்பு, பாதை மற்றும் இழுவை போன்ற பல முக்கிய அம்சங்களுக்கு தர நிர்ணய அமைப்பு மற்றும் ரயில்வே வாரியத்தின் ஒப்புதல்கள் மிக அவசியம். இரண்டாம் கட்டத் திட்டத்தின் 4-வது வழித்தடத்தில் உள்ள பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவைகளைத் தொடங்க இந்த ஒப்புதல்கள் கட்டாயமாகத் தேவை. கடந்த ஆகஸ்ட் மாதம், தர நிர்ணய குழுவினர் பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில் பாதுகாப்பான இயக்கத்திற்குத் தேவையான பல்வேறு அம்சங்களை விரிவாகப் பரிசோதித்திருந்தனர். இந்தப் பரிசோதனைகளின் அடிப்படையில், இரண்டாம் கட்டத் திட்டத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டிய வேகத்திற்கு ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். ஆனால் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை.
இது குறித்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் கூறுகையில், "பாதை, சிவில் மற்றும் இழுவை அமைப்புக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் வேகச் சான்றிதழையும், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புக்கான ஒப்புதலையும் தர நிர்ணய அமைப்பு இன்னும் வழங்கவில்லை" என்று கூறுகின்றனர். தர நிர்ணய அமைப்பு என்பது ரயில்வே அமைச்சகத்தின் ஒரு அங்கம். இத ரயில்வே வாரியத்திற்கு தொழில்நுட்ப ஆலோசகராக செயல்பட்டு வருகிறது. சிம்பிளாக சொல்வதெனில் தர நிர்ணய அமைப்பு ஒப்புதல் அளித்தால்தான், இறுதி ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்கும்.
பொதுவாக இந்த அமைப்பு ஆய்வு செய்தால் அடுத்த 15 நாட்களில் ஒப்புதல் கிடைத்துவிடும். சில நேரங்களில் ஒரு மாதம் கூட ஆகலாம். ஆனால் அதையும் தாண்டி கால அவகாசம் ஆவது வழக்கத்திற்கு மாறானது என்று கூறும் அதிகாரிகள், "பரிசோதனைகளுக்குப் பிறகு சில கேள்விகள் கேட்கப்பட்டன, அவற்றுக்கு நாங்கள் ஏற்கனவே பதிலளித்துவிட்டோம். ஒப்புதல்கள் ஏன் இன்னும் வழங்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை. மெட்ரோ அதிகாரிகள், ரயில்வே வாரிய அதிகாரிகளை விரைவில் சந்திக்க உள்ளனர். வாரியத்திற்கு கூடுதல் தகவல், விளக்கம் தேவைப்படுகிறதா? என்பது குறித்து இந்த சந்திப்பின்போதுதான் தெரிய வரும்" என்று கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications