சென்னை மெட்ரோ ரயில் பணிகள்..மயிலாப்பூர்வாசிகளே..3 ஆண்டுகளுக்கு இந்த பகுதிகளில் டேக் டைவர்சன்
சென்னை:
மெட்ரோ ரயில்கள் பணிகள் நடைபெறுவதால் மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கச்சேரி சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் இன்று முதல் 3 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ரூ.63,246 கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு நடைபெறுகின்றன. இந்த திட்டத்தில், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 3-வதுவழித்தடம் 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை 4-வது வழித்தடம் 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடம் 47 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.

40க்கும் மேற்பட்ட இடங்களில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோல, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், மயிலாப்பூரில் 3 நடைமேடைகளுடன் ஆழமான மெட்ரோ ரயில் நிலையம் அமையவுள்ளது. இதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கி உள்ளன.
மயிலாப்பூர் நிலையம் 3வது மற்றும் 4வது வழித் தடத்துக்கான பரிமாற்ற நிலையமாக இருக்கும். இங்கு பொதுத்தளம்,வணிக அலுவலகம், மேல் நடைமேடை, கீழ்நடை மேடை என 4 நிலைகளுடன் தரைக்குக் கீழே 35 மீ ஆழத்தில் இந்த நிலையம் அமைய உள்ளது. சில ஆண்டுகளில் மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையம் திறக்கப்படும் போது, அது மிகப்பெரிய பொறியியல் அற்புதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிலைய பணிகளுக்காக மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கச்சேரி சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் இன்று முதல் 3 ஆண்டுகளுக்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முண்டக்கன்னி அம்மன் கோயில் தெருவில் இருந்து கச்சேரி சாலைக்கு வாகனங்கள் செல்வதைக் கட்டுப்படுத்தி கல்விவாரு தெருவில் தற்போதுள்ள ஒரு வழிப்பாதை அமைப்பு மாற்றியமைக்கப்பட்டு, வாகனங்கள் கச்சேரி சாலையில் இருந்து முண்டக்கன்னி அம்மன் கோயில் தெருவிற்கு அனுமதிக்கப்படும்.
லஸ் சந்திப்பிலிருந்து கச்சேரி சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலையை நோக்கி இலகு ரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு, கல்விவாரு தெரு முண்டக்கன்னி அம்மன் கோயில் தெரு மற்றும் பஜார் சாலை வழியாக செல்லலாம்.
சாந்தோம் நெடுஞ்சாலையிலிருந்து கச்சேரி சாலை வழியாக லஸ் சந்திப்பை நோக்கி இலகு ரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு, தேரடி தெரு, நடு தெரு மற்றும் ஆர்.கே.மட் சாலை (அல்லது) மாதா சர்ச் சாலை வழியாகவும் செல்லலாம்.
மாநகர் பேருந்து 12- பி லஸ் சந்திப்பிலிருந்து கச்சேரி சாலை வழியாக போர் ஷோர் எஸ்டேட் பேருந்து நிலையம் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. ராயப்பேட்டை நெடுஞ்சாலை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாகவும் திரும்பி வரும் போது, வி.எம்.தெரு வரை வழக்கம் போல் வந்து டி.டி. கே சாலை வழியாக செல்ல வேண்டும்.
மாநகர் பேருந்து 12 எக்ஸ், லஸ் சந்திப்பிலிருந்து கச்சேரி சாலை வழியாக போர்ஷோர் எஸ்டேட் பேருந்து நிலையம் செல்ல தடைசெய்யப்பட்டு, ஆர் மற்றும் தெற்கு கால்வாய்கரை சாலை வழியாகவும் திரும்பி வரும் போது மந்தைவெளி பஸ் நிறுத்தம் வரை வழக்கம் போல் வந்து, வெங்கடகிருஷ்ணா சாலை மற்றும ஆர்.கே.மட்சாலை வழியாக செல்ல வேண்டும்.
கச்சேரி சாலையில் சிஎம்ஆர்எல் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட உள்ள கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ பணிகளை செய்ய வசதியாக போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டு கடந்த 10ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த ஒரு வாரத்திற்கான சோதனை ஓட்டம் நன்கு செயல்பட்டதால், சிஎம்ஆர்எல் கோரியபடி இந்த போக்குவரத்து மாற்றங்கள் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications