உள்ளாடையில் இருந்து விழுந்த தங்கம்.. மயிலாப்பூர் கொள்ளைக்காரி இந்திராவை சிக்க வைத்த சின்ன விஷயம்
சென்னை: சென்னை மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோவில் தெருவில் தனியாக வசித்துவந்த மூதாட்டி ராஜேஷ்வரியிடம் நகை பணத்தை கொள்ளையடித்த இந்திரா என்ற பெண் சிக்கியது எப்படி என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. ராஜேஸ்வரியின் சேலை முந்தானையால் அவர் சத்தம் போடாமல் இருக்க வாயை பொத்திய இந்திரா, அவரது மேல் உட்கார்ந்திருந்திருந்துள்ளார். அப்போது மூதாட்டி ராஜேஸ்வரி 'நாராயணா' என்று எழுப்பிய அபயக்குரலை கேட்டு அங்கு வந்த வைஷ்ணவி அவரை காப்பாற்றி உள்ளார். நடந்தது பற்றி பார்ப்போம்.
சென்னை மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோவில் தெருவில் தனியாக வசித்து வருபவர் ராஜேஸ்வரி. இவருக்கு 81 வயது ஆகிறது. இவரது பக்கத்து வீட்டில் அரியலூர் மாவட்டம் பாலூர் பகுதியை சேர்ந்த 54 வயதாகும் இந்திரா என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார். வேலைக்காரியான இந்திரா, வீட்டில் ராஜேஸ்வரி தனியாக இருந்ததை கண்டு கொள்ளையடிக்க திட்டமிட்டார். ஆனால் இந்திராவை 'நாராயணா' என்று கடவுளை வேண்டியபடி ராஜேஸ்வரி எழுப்பிய குரல் காப்பாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

தண்ணீர் கேட்ட இந்திரா
சென்னை மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் ராஜேஸ்வரி நேற்று முன்தினம் வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு தனியாக இருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வேலைக்காரியாக பணியாற்றும் இந்திரா, திடீரென வீட்டுக்குள் வேகமாக வந்துள்ளார். ராஜேஸ்வரி முழித்திருப்பதை பார்த்ததும் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டாராம். பின்னர் சுற்றிப்பார்த்த இந்திரா, ராஜேஸ்வரியை கண் இமைக்கும் நேரத்தில் தாக்கி கீழே தள்ளினாராம்.
வாயை பொத்தினார்
கீழே விழுந்த ராஜேஸ்வரி மீது ஏறி உட்கார்ந்து அவரது கழுத்தை இந்திரா நெரிக்க தொடங்கினார். ராஜேஸ்வரியின் சேலை முந்தானையால் அவர் சத்தம் போடாமல் இருக்க வாயை பொத்தினாராம். அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. வாயை இந்திரா பொத்திய போதிலும் அவரது கையை தட்டிவிட்டு காப்பாற்றுமாறு பாட்டி ராஜேஸ்வரி குரல் எழுப்பினாராம். ஆனாலும் விடாத இந்திரா அருகில் கிடந்த கத்தரிக்கோலால் ராஜேஸ்வரியை குத்த முயற்சி செய்தாராம். இதனால் ராஜேஸ்வரி மயக்க நிலைக்கு சென்றுள்ளார்.
நாராயணா குரல்
பாட்டி ராஜேஸ்வரி மயக்கம் அடைவதற்கு முன்பாக 'நாராயணா... நாராயணா..'. என்னை காப்பாற்று என்று கடவுளை நோக்கி குரல் எழுப்பினாராம்.இதனிடையே மயக்கமும் அடைந்துவிட்டாராம். அப்போது சந்தர்ப்பத்தை பயன்படுத்திய இந்திரா, ராஜேஸ்வரி அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி, 4 தங்க வளையல்கள் மற்றும் காதில் கிடந்த வைர கம்மல்களை கழற்றியதாக கூறப்படுகிறது.
ராஜேஸ்வரி மேல் இந்திரா
பின்னர் கொள்ளையடித்த அந்த நகைகளை தனது ஆடையில் சுற்றி மறைத்து வைத்துக்கொண்டு செல்ல முயன்றுள்ளார். இதனிடையே பாட்டியின் சத்தம் கேட்டு, அதே குடியிருப்பில் வசிக்கும் வைஷ்ணவி என்ற பெண் தனது சகோதரருடன் சம்பவ இடத்திற்கு வந்திருக்கிறார். அப்போது ராஜேஸ்வரி மீது இந்திரா உட்கார்ந்து இருந்ததை வைஷ்ணவி கவனித்தார்.
காட்டிக் கொடுத்த நகைகள்
அதேநேரம் வைஷ்ணவி தவறாக நினைக்கக்கூடாது என்பதற்காக, 'ராஜேஸ்வரியை தாக்கிவிட்டு மர்ம நபர் ஒருவர் அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டார் என்று கூசாமல் பொய் கூறினாராம். அப்படி சொல்லிவிட்டு அங்கிருந்து தப்ப முயன்ற போது,இந்திராவின் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த தங்க-வைர நகைகள் கீழே விழுந்தன. இதை பார்த்த வைஷ்ணவி, இந்திராவை போகவிடாமல் தடுத்துள்ளார். உடனே போலீசுக்கு தகவல் சொன்னார். அதற்குள் அந்த குடியிருப்பில் வசிக்கும் ஆண்களும், பெண்களும் குவிந்தனர். இந்திராவை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றார்கள்.
வைஷ்ணவிக்கு பாராட்டு
இதனிடையே இந்திராவுடன் சண்டையில் உயிரை காப்பாற்ற போராடி, மயங்கி கிடந்த மூதாட்டி ராஜேஸ்வரியை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்கு சேர்த்தனர். தக்க சமயத்தில் வந்து பாட்டி ராஜேஸ்வரியை காப்பாற்றியதுடன், தப்பி ஓட முயன்ற கொள்ளைக்காரி இந்திராவையும் மடக்கி பிடித்த வைஷ்ணவிக்கு மயிலாப்பூர் பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். போலீசாரும் வைஷ்ணவியை பாராட்டினார். 'நாராயணா' என்ற குரலை கேட்டு ராஜேஸ்வரி பாட்டியை காப்பாற்றியதாக வைஷ்ணவி கூறியுள்ளார். வீட்டில் தனியாக இருந்த பாட்டியிடம் கொள்ளையடிக்க திட்டமிட்ட இந்திரா வசமாக சிக்கி தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.












Click it and Unblock the Notifications