புயல் மழை வெள்ளத்தால் தத்தளித்த சென்னை மக்கள்! களமிறங்கி கரம் கொடுத்த அரசியல் தலைவர்கள் யார்?
சென்னை: புயல் மழை வெள்ளத்தால் சென்னை மக்கள் தத்தளித்த போது ஒரு சில தலைவர்களை தவிர தமிழகத்தை சேர்ந்த பெரும்பாலான அரசியல் தலைவர்கள் களமிறங்கி கரம் கொடுத்து தங்களால் இயன்ற நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர்.
வங்கக்கடலில் உருவாக மிக் ஜாம் புயலால் சென்னையில் கடந்த 3ஆம் தேதி மற்றும் 4ஆம் தேதி ஆகிய 2 நாட்களும் கடுமையான மழை பெய்தது.
சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை நீர் வடிய வழியில்லாமல் வெள்ளம் சூழ்ந்தது. கூடவே பாதுகாப்பு கருதி மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனாம் மக்கள் தவித்து தத்தளித்துவிட்டனர்.

இந்த பேரிடர் நேரத்தில் 14 அமைச்சர்களை களமிறக்கிய முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின், தன்னை ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதையே மறந்து சாதாரண கவுன்சிலரை போல் சென்னை மாநகர் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தார் ஜீப்பில் சென்று மக்களுக்கும் நம்பிக்கையூட்டினார். அதேபோல் 5ஆம் தேதி அன்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய கையோடு சென்னையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டு சேலத்திற்கு பறந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்து இன்று மீண்டும் சென்னையில் நிவாரணப் பொருட்கள் வழங்கி எதிர்க்கட்சித் தலைவர் என்ற கடமையை நிறைவேற்றியிருக்கிறார். இதனிடையே மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., மனிதநேய ஜனநாயக கட்சியின் தொண்டர்களையும் தன்னார்வலர்களையும் சும்மா சொல்லக்கூடாது, இடுப்பளவு தண்ணீரிலும் வீதி வீதியாக சென்று பால் பாக்கெட், உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்களை வழங்கி மனிதம் போற்றியுள்ளனர்.
அதே போல் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அண்ணா நகர் பகுதியில் 1500 பேருக்கு மதிய உணவு வழங்கினார். ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரும் வெள்ளப்பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு நிவாரணப் பொருட்கள் வழங்கினர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையையும் சும்மா சொல்லக்கூடாது, அவரும் பெரியளவில் இந்த முறை நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார்.
இவர்களை போலவே நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமானும் படகை எடுத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விசிட் அடித்து உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். கே.எஸ்.அழகிரி, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், டிடிவி தினகரன், ஜிகே வாசன், போன்ற அரசியல் தலைவர்களை தான் பெரும்பாலும் களத்தில் பார்க்க முடியவில்லை.












Click it and Unblock the Notifications