அடுத்த ஒரு வாரம்! சென்னையில் முக்கிய சாலைகளில் திடீர் போக்குவரத்து மாற்றம்! அந்த பக்கம் போனால் கவனம்
சென்னை: சென்னை மெட்ரோ கட்டுமான பணிகளால் நகரில் பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சென்னையில் இப்போது இரண்டு ரூட்களில் மெட்ரோ இயங்கி வருகிறது. இதற்கான வரவேற்பு அதிகமாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு மாதமும் மெட்ரோவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

இதற்கிடையே அடுத்த கட்டமாக 3 ரூட்களில் புதிதாக மெட்ரோவை அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கட்டுமானம் நிறைவடைந்தால் விரிவான பொது போக்குவரத்தைக் கொண்ட ஒரு நகரமாகச் சென்னை மாறும்.
மெட்ரோ கட்டுமானம்: இப்போது மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் பூங்கா, பூந்தமல்லி டூ லைட் ஹவுஸ், மாதவரம் பால் பண்ணை டூ சோழிங்கநல்லூர் என்று 3 வழித்தடங்களில் ரூ. 61,843 கோடி மதிப்பில் 116 கிமீ நீளத்திற்கு மெட்ரோ 2ஆம் கட்டுமானம் நடந்து வருகிறது. நகரில் பல்வேறு பகுதிகளிலும் கட்டுமானம் நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ அடுத்தாண்டு முதல் படிப்படியாகச் செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது. இவை முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வர 2028 வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மெட்ரோ கட்டுமானம் காரணமாக நகரில் பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. அதன்படி முக்கிய சாலைகளில் அடுத்த ஒரு வாரத்திற்குச் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் தொடர்பாகச் சென்னை போக்குவரத்து போலீசார் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இது குறித்து சென்னை போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "GCTP- CMRL பணியின் காரணமாக அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்டேர்லிங் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
போக்குவரத்து மாற்றம்: அதன்படி கீழ்கண்ட CMRL நிலையங்களில் கட்டுமான பணிக்காக அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ நிலையம் மற்றும் ஸ்டேர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் இன்று (11-ம் தேதி) முதல் ஒரு வாரக் காலத்திற்குப் பின்வரும் போக்குவரத்து மாற்றங்களைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு, ஹாடேஸ் ரோடு உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமனி மேம்பாலத்தை அடையும் வகையில் செல்லும் (ஏற்கனவே உள்ளபடி). இந்த பாதை ஒரு வழிப்பாதையாகச் செயல்படுத்தப்படும்.
முக்கிய சாலைகள்: இதேபோல், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், உத்தமர் காந்தி சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை (டாக்டர் எம்.ஜி.ஆர் சாலை) வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கிச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். (மாற்றுப்பாதை ஒரு வழிப்பாதை).
அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் (இடதுபுறம்) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தகரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம். (ஏற்கனவே உள்ளபடி).
வள்ளுவர் கோட்டம்: வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம் அல்லது வலதுபுறம் திரும்பி திருமலைபிள்ளை ரோடு, G.N. செட்டி ரோடு வழியாக அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) சென்று அடையலாம்.
மற்ற பிற உட்பற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிப்பாதை போக்குவரத்து அனுமதிக்கப்படும். மாற்றத்திற்குத் தகுந்தபடி போக்குவரத்து வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications