சின்ன பொண்ணுங்கய்யா..பள்ளி சிறுமிகளை வைத்து பாலியல் தொழில்! சென்னையில் ‘பகாசுரன்’ புரோக்கர் கும்பல்
சென்னை: பகாசுரன் படத்தில் வருவது போல ஏழை பள்ளிச் சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த புரோக்கர் கும்பலைச் சேர்ந்த ஏழு பேரை கைது செய்துள்ளனர் சென்னை காவல்துறையினர். புரோக்கர் கும்பல் தற்போது சிக்கி இருக்கும் நிலையில் சிறுமிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொண்ட வாடிக்கையாளர்கள், அரசியல் புள்ளிகள், லோக்கல் ரவுடிகள் எப்போது கைது செய்யப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியானது பாகாசுரன் திரைப்படம். இந்த படத்தில் கல்லூரி மாணவிகளை ஆசை காட்டியும் மிரட்டியும் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த கும்பல் பற்றிய பின்னணி படத்தில் சொல்லப்பட்டிருக்கும்.

இதே பாணியில் ஏழ்மையில் தத்தளித்துக் கொண்டிருந்த பள்ளி சிறுமிகளுக்கு 500, 1000 எனக் கொடுத்து அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த கும்பலை கைது செய்து இருக்கின்றனர் சென்னை காவல்துறையினர். பதற வைக்கும் இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்..
பாலியல் தொழில்: கடந்த சில நாட்களுக்கு முன்பு மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வரும் கும்பலை கொத்துக் கொத்தாக கைது செய்தனர் சென்னை காவல்துறையினர். இது தொடர்பாக 55 மசாஜ் சென்டர்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் அனைவருமே கல்லூரி மாணவிகள் குடும்பப் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி மாணவிகள்: ஸ்பா என்ற பெயரில் வேலைக்கு அழைத்து வரும் பெண்களுக்கு சம்பளம் தவிர்த்து கூடுதலாக பணம் வேண்டுமென்றால் வாடிக்கையாளர்களுடன் அட்ஜஸ்ட் செய்து கொண்டால் நிறைய பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியதோடு தொடர்ந்து அவர்கள் தனிமையில் இருக்கும் வீடியோவை எடுத்து அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததும் தெரிய வந்தது.
அதிர்ச்சி தகவல்: இந்த கும்பல் குறித்த விசாரணையில் இறங்கிய போது, பிரபல ரவுடி ஒருவரின் தொடர்பு இருப்பதாக சென்னை காவல்துறையினருக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று கிடைத்தது. கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாமல் 11, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளையும் இதேபோல பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தது சென்னை மாநகர காவல் ஆணையாளர் சந்திப் ராய் ரத்தோருக்கு தெரியவந்தது. இந்த புகாரை அளித்தவர்கள் சென்னை குழந்தைகள் நல குழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்கிய கும்பல்: இதை அடுத்து சென்னை சிசிபி இன்ஸ்பெக்டர் செல்வராணி குழுவினர் இது தொடர்பான விசாரணையில் இறங்கினர். அப்போது சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு அதிரடி சோதனை நடத்தினர் சிசிபி போலீசார். அப்போது சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த 75 வயது முதியவர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் மற்றொரு பகுதியில் வசிக்கும் பெண் புரோக்கர் ஒருவரையும் அவரது தங்கையையும் அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
12ஆம் வகுப்பு மாணவிகள்: அப்போதுதான் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பணத்தாசை காட்டி அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபட்டு பல முக்கிய புள்ளிகளுக்கு இரையாக்கியது தெரிய வந்தது. கைதான பெண் புரோக்கரின் மகள் ஒருவர் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார் அவரை பாலியல் தொழிலில் தள்ளியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமியுடன் படிக்கும் மற்ற மாணவிகளையும் தனியே வசிக்கும் பெண்களின் குழந்தைகளையும் குறிவைத்து இந்த கும்பல் பாலியல் தொழிலில் தள்ளியுள்ளது.
வறுமையான சூழல்: அதுமட்டுமல்லாமல் குடும்ப வறுமை காரணமாக படித்துக் கொண்டே பார்ட் டைம் வேலை செய்யும் மாணவிகளுக்கு சம்பாதிக்கும் ஆசையை காட்டி அவர்களுக்கு பணத்தை கொடுத்து வந்திருக்கிறது இந்த கும்பல். ஒரு கட்டத்தில் பணத்தை திருப்பி கேட்கும் போது திணறிப் போகும் மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளியதும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
அதிரடி கைது: இதுதொடர்பாக விபச்சார தடுப்பு பிரிவில் குழந்தைகள் நலக்குழு அதிகாரி பாலகுமாரன் புகார் அளித்தார். இந்த புகாரில் 75 வயது முதியவர் மற்றும் ஏழு பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து செல்போன்கள் கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்திருக்கின்றனர். மேலும் இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட மாணவிகள் யார்? என்பதை கண்டறிந்து அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.
அரசியல் புள்ளிகள்: இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் மீட்கப்பட்டு அவர்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட வேண்டும் அல்லது மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என கூறும் சமூக ஆர்வலர்கள் காவல்துறையினரின் நடவடிக்கையை இத்தோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது என்கின்றனர். மேலும் இதுவரை சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வாடிக்கையாளர்கள் யார்? அரசியல் புள்ளிகளுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா? லோக்கல் ரவுடிகள் ஆதிக்கம் இருக்கும் நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என பல்வேறு கேள்விகளை கேட்கின்றனர். அப்படி இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications