சென்னையில் அதிகாலையிலேயே குலை நடுங்க வைத்த கொள்ளை.. கத்தி முனையில் கட்டு கட்டாக அள்ளி சென்ற கும்பல்
சென்னை: சென்னை புழல் அருகே அதிகாலையில் துணிகர கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் தொழில் அதிபரின் வீட்டுக்குள் புகுந்ததோடு, அவரது குடும்பத்தினரை கட்டிப்போட்டு கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் மிரட்டி கட்டு கட்டாக நகை பணத்தை பறிமுதல் செய்தனர். சென்னையில் குலை நடுங்க வைத்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.
சென்னையை அடுத்த புழல் மகாவீர் கார்டன் பிரதான சாலையை சேர்ந்த தொழில் அதிபர் விஜயகுமார் (வயது 50). இவரது மனைவி வசந்தா (45). இந்த தம்பதிக்கு சினேகா, பவித்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர். விஜயகுமார் சென்னை மற்றும் மணிப்பூரில் மெத்தை, கம்பளி போர்வை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

கதவை திறந்ததும் வசந்தா கழுத்தில் கத்தி
நேற்று முன் தினம் இரவு விஜயகுமார் மற்றும் குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். அதிகாலை 5 மணிக்கு வசந்தா நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக வீட்டின் வாசல் கதவை திறந்துள்ளார். ஆனால் அதற்கு முன்பே முகமூடி கும்பல் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து இருக்கிறார்கள். வசந்தா வாசல் கதவை திறந்ததும் அவர் கழுத்தில் ஒருவர் கத்தியை வைத்தார்.
இதையடுத்து அவரை மிரட்டியபடியே வீட்டுக்குள் புகுந்தனர். மொத்தம் 6 பேர் கும்பலினர் வீட்டுக்குள் புகுந்து இருக்கிறார்கள். வசந்தி கத்தி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஒவ்வொருவராக வெளியில் வர அவர்கள் ஒவ்வொருவரையும் கத்தி முனையில் மிரட்டி வாயில் பிளாஸ்திரியை ஒட்டி கட்டிப்போட்டனர்.
பீரோ எங்கே இருக்கு?
பின்னர் நகை, பணம் எங்கு வைத்திருக்கிறாய் என விஜயகுமாரை கத்தி முனையில் மிரட்டினர். இதில் அவர் பீரோ சாவி இருக்கும் இடத்தை கூறினார். இதையடுத்து பீரோவில் வைத்திருந்த ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் 10 பவுன் தங்க நகைகளை எடுத்தனர். பிறகு வசந்தா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையையும் பறித்தனர். அவர்களை அப்படியே கயிற்றில் கட்டி வைத்துவிட்டு அந்த கும்பலினர் காரில் தப்பி சென்றனர்.
இதற்கிடையே வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் காலை 8 மணியளவில் வந்த போது வீட்டின் உரிமையாளர் உள்பட அனைவரும் கயிற்றில் கட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதன் பிறகு நடந்த சம்பவம் குறித்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு விஜயகுமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மோப்ப நாயுடன் வீட்டுக்கு வந்து சோதனை நடத்தினர்.
போலீசார் தீவிர விசாரணை
தொடர்ந்து கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். இது தொடர்பாக போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா, வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் திட்டமிட்டு இந்த கும்பல் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதும் தெரியவந்துள்ளது. அதிகாலை நேரத்தில் தொழில் அதிபர் வீட்டில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடு புகுந்து முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications